முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு 

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான இந்திய மருத்துவ

Updated On :19 ஏப்ரல் 2018, 1:07 am IST

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 
இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படி, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பட்டயப் படிப்புக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. பட்டப் படிப்புக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், எம்.எம். சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் கே.வி. விஸ்வநாதன், ஆர். வெங்கடரமணி, அர்விந்த் பி. தத்தார் உள்ளிட்டோர் ஆஜராகி முன்வைத்த வாதம்: 
நீட் மதிப்பெண் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதமான இடங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்து வருகின்றன. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளன. தொலைதூர, கிராமப்புறங்களில் சேவையாற்றும் இளம் மருத்துவர்களுக்கு ஆண்டுதோறும் 10 சதவீதம் என்ற வீதத்தில் அதிகபட்சமாக 30 சதவீதம் ஊக்க மதிப்பெண் "நீட்' தேர்வில் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற இடஒதுக்கீடு முறையானது மாநிலங்களுக்கு உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல காரணங்களைக் சுட்டிக்காட்டி, பல ஆண்டுகளாக மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதுடன், நகர்ப்புறத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், கிராமப்புறத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் இடையே பாகுபாட்டை உருவாக்குகின்றன. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மாநிலங்கள் அளித்து வரும் இதுபோன்ற இட ஒதுக்கீடு முறையை அனுமதிக்க வேண்டும். 1989-ஆம் ஆண்டு தொடங்கி தமிழகம் இதுபோன்ற இடஒதுக்கீட்டை அளித்து வருகிறது. இதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
 இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விகாஸ் சிங், "கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தால் அது தரத்தை நீர்த்துப் போகச் செய்யும். எனவே, நீட் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்' என்றார். 
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.