தில்லி நிஹால் விஹாரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரைத் தாக்கி பணம், பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லியைச் சேர்ந்தவர் விபின் அகர்வால் (38). நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் வணிகத்தில் ஈடுபட்டு வருபவர். சம்பவத்தன்று ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரேட்டர் கைலாஷ் சென்றார். பின்னர், அங்கிருந்து தனது வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். நிஹால் விஹார் பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் அவரது காரை வழிமறித்தனர். விபின் அகர்வால் தனது காரின் கண்ணாடியைக் கீழே இறக்கி அவர்களிடம் விசாரிக்க முயன்றார். அப்போது, நான்கு பேர்களில் இருவர் விபினின் காரின் சாவியை பறித்தனர். அதன் பிறகு அவரைக் காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்துப் போட்டனர்.
இதையடுத்து, தப்பிச் சென்று லாரியில் ஏற முயன்ற அகர்வாலை மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரும் அடித்து உதைத்தனர். பின்னர், அவரிடமிருந்து செல்லிடப்பேசி, பணம் மற்றும் காரைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாக விபின் அகர்வால் அளித்த புகாரின் பேரில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தில்லியைச் சேர்ந்த சூரஜ், கௌசீந்தர், ஜித்தன் ஆகியோர் எனத் தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.