டியு: தலைவர் பதவியை ஏற்றார் மாணவர் சங்கத் துணைத் தலைவர்
ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் சக்தி சிங், தலைவர்
ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் சக்தி சிங், தலைவர் பதவியை புதன்கிழமை ஏற்றார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், சக்தி சிங்கின் செயல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ தெரிவித்துள்ளது.
தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்ததையடுத்து, துணைத் தலைவர் சக்தி சிங், தலைவர் பதவியையேற்றுள்ளார்.
இதுகுறித்து ஏபிவிபி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இல்லை. தில்லி பல்கலைக்கழகத்துக்கு புதிதாக தேர்தல் நடத்தத் தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகையால், மாணவர் சங்கத் தலைவர் அறைக்கு புதன்கிழமை சென்ற துணைத் தலைவர் சக்தி சிங், தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்' என்றார்.
ஆனால், "சக்தி சிங் தனது ஆதரவாளர்களுடன் வலுக்கட்டாயமாக தலைவர் அலுவலகத்தில் நுழைந்து, பாதுகாவலர்களை அடித்துள்ளார்' என்று என்எஸ்யுஐ குற்றம்சாட்டியுள்ளது. தில்லி உயர்நீதிமன்ற உத்தரவே தில்லி பல்கலைக்கழகத்துக்கு கிடைக்காத நிலையில், சக்தி சிங்கின் இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் என்எஸ்யுஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக, போலி கல்விச் சான்றிதழ் அளித்து மாணவர் சேர்க்கை பெற்றதாக, பாஜக ஆதரவு பெற்ற ஏபிவிபியைச் சேர்ந்த தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அங்கித் பசோயா நீக்கப்பட்டார். அங்கித் பசோயாவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-வின் தலைவர் சன்னி சில்லர் தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "பசோயா போலி சான்றிதழ் அளித்து தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார் என்பது நிரூபனமாகியுள்ளது. ஆகையால், அவர் தேர்தலில் பெற்ற வெற்றியும் செல்லுபடியாகாது. தில்லி பல்கலைக்கழகமும் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி பசோயாவின் சேர்க்கையை ரத்து செய்துள்ளது. தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் சங்கத் தலைவரின் பதவி காலியானால்தான் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று லின்டோ குழுவின் விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பசோயா மீது நடவடிக்கை எடுப்பதை தில்லி பல்கலைக்கழகம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. ஆகையால், புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "பசோயா மீது நடவடிக்கை எடுத்ததில் தில்லி பல்கலைக்கழகம் தாமதம் செய்யவில்லை. ஆகையால், லிண்டோ குழுவின் விதிமுறைகள் இதற்கு பொருந்தும். இதுதொடர்பான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






