அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய தில்லி அரசுக்கு அதிகாரம் இல்லை
அதிகாரிகள் பணி நியமனம், பணியிடமாற்றம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தில்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என


அதிகாரிகள் பணி நியமனம், பணியிடமாற்றம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தில்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தில்லியில் தேவையில்லாத அரசியல் குழப்பத்தை முதல்வர் கேஜரிவால் ஏற்படுத்தி வருகிறார். தில்லி ஒரு தனி மாநிலம் அல்ல. இது ஒரு யூனியன் பிரதேசம் என உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு அடிபணிந்து போகாத அரசு அதிகாரிகளை தில்லி அரசு பணியிடமாற்றம் செய்ய முயற்சிப்பதுடன், தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை பணி நியமனம் செய்ய முயற்சிக்கிறது. இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
தில்லியில் தீர்வு காண வேண்டிய மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ இருக்கும் போது, அரசு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது முக்கியமான பிரச்னை அல்ல. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தில்லி துணை நிலை ஆளுநருடன் இணைந்து மக்கள் நலப் பணிகளில் தில்லி அரசு ஈடுபடும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், தில்லி அரசு தனது வழக்கமான அராஜக அரசியலில்தான் ஈடுபட்டுள்ளது. மக்கள் நலப் பணிகளை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தில்லி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற தில்லி அரசின் குற்றச்சாட்டு உண்மையென்றால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தில்லி அரசு தொடரலாமே?
மேலும், தில்லியின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக 2015, மே 21- ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் எவ்வித மாற்றத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தவில்லை. இதன்படி, தில்லி துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அப்படியேதான் உள்ளன. மேலும், பணிகள் துறை, ஊழல் தடுப்புத் துறை ஆகியன துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. தில்லி அரசு தங்களது அதிகார எல்லையைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதிகாரிகளை மிரட்டுவது பயனளிக்காது என்பதை தில்லி அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...