40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

தில்லியில் ஜந்தர் மந்தர் சாலை, போட் கிளப் பகுதிகளில் போராட்டங்கள் நடத்துவதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்ட முழு அளவிலான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 12:24 am IST

தில்லியில் ஜந்தர் மந்தர் சாலை, போட் கிளப் பகுதிகளில் போராட்டங்கள் நடத்துவதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்ட முழு அளவிலான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மேலும், அந்தப் பகுதிகளில் போராட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான வழிமுறைகளை இரு மாதங்களுக்குள் உருவாக்கவும் தில்லி காவல் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
முன்னதாக, ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வருண் தேஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜந்தர் மந்தரில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவை தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், போராட்டங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் அமைதியான சூழலில் வாழ்வதற்கும், தூங்குவதற்கும் உரிமை உண்டு. இந்த உரிமையை இதுபோன்ற தொடர் போராட்டங்கள் பறித்து வருகின்றன. எனவே, ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2017, அக்டோபர் 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், "போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியை தொடர்ந்து பயன்படுத்தி வருவது சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு சட்டத்தை (1981) மீறும் வகையில் உள்ளது. எனவே,  ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக தடுக்க வேண்டும்.  ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்கள் அமைத்துள்ள பந்தல், ஒலிப்பெருக்கிகள், தாற்காலிக கூடாரங்கள், மேடைகள் உள்ளிட்டவற்றை தில்லி அரசு,  புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி),  தில்லி காவல்துறை ஆகியவை அகற்ற வேண்டும். போராட்டங்களுக்கு, ராம் லீலா மைதானத்தில் இடமளிக்க வேண்டும்'  என்று தெரிவிக்கப்பட்டது.
மேல்முறையீடு: இந்த உத்தரவுக்கு எதிராகவும், அவ்வப்போது விதிக்கப்படும் 144 தடை  உத்தரவுக்கு எதிராகவும் மஸ்தூர் கிசான் சக்தி அமைப்பு,  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர்  பி. அய்யாக்கண்ணு ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தடை நீக்கம்: இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 
ராம் லீலா மைதானத்தில் போராட்டங்களுக்கு போதுமான இட வசதி இல்லை. ஜந்தர் மந்தரில் உள்ள சில பகுதிகளில் அமைதியான பொதுக் கூட்டம், பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்து சமநிலையை உருவாக்க முடியும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முறையான வழிமுறைகளை உருவாக்க தில்லி காவல் ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது.
இதேபோல, இந்தியா கேட் பகுதியில் உள்ள போட் ஹவுஸ் பகுதியிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றை முறையான அனுமதியுடன் நடத்துவது தொடர்பாக எவ்வித தடையும் இல்லை. 
இருப்பினும், போட் கிளப் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் போராட்டங்க , ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு அனுமதி அளிக்க முறையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். 
ஜந்தர் மந்தர், போட் கிளப்  ஆகிய பகுதிகளில் போராட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தேவையான வழிமுறைகள் இரு மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.  இதன்படி,  மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.