தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில், "நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தால்
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும்,
பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
இந்த திட்டத்தை தனது அதிகார வரம்பிற்கு மீறி சுற்றுச்சூழல் அனுமதிக்காக பரிந்துரைத்த மத்திய வல்லுநர் மதிப்பீட்டுக் குழு மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும், சுற்றுச்சூழல் அனுமதி வழங்க உத்தரவிட்ட சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கும் உத்தரவிட வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஜாவத் ரஹீம், நீதிபதிகள் எஸ்.பி. வாங்க்டி, நாகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஏப்ரல் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஜி. சுந்தர்ராஜன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரித்விக் தத்தா, "நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்- செயலாளர், மாநில அளவிலான சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர்- செயலாளர், "தி டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமென்டல் ரிசர்ச்' அமைப்பின் திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
வழக்கு விசாரணை மே 18 -ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவித்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கடந்த மே மாதத்திலும், தமிழக அரசு தலைமைச் செயலர் சார்பில் பதில் மனு கடந்த வாரத்திலும் அரசு வழக்குரைஞர் ராகேஷ் சர்மா தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ரகுவேந்திர எஸ். ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தி டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமென்டல் ரிசர்ச் அமைப்பு ஆகியோரது சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






