அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தில்லியில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்: வாகன ஓட்டிகள் அவதி; ரூ.55 கோடி வணிகம் பாதிப்பு

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத தில்லி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை

Updated On :22 அக்டோபர் 2018, 8:09 pm

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத தில்லி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை காலை 6 மணியில் இருந்து தில்லியில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், சுமார் ரூ.55 கோடி அளவுக்கு வணிகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தில்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தால் வாகன ஓட்டிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரியில் லிட்டர் ஒன்றுக்கு தலா ரூ.1.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் அறிவித்தார். இதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் இவற்றின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தலா ரூ.1 வீதம் குறைத்தன. 
மேலும், மாநில அரசுகளும் ரூ. 2.50 குறைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருந்தார். மத்திய அரசின் இந்த வேண்டுகோளை ஏற்று, பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆளும் 11 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கப்பட்டது.
இதேபோல், தில்லியிலும் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதே கோரிக்கையை தில்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கமும் வலியுறுத்தியது. ஆனால், தில்லி அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கும் விஷயத்தில் தில்லி அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, திங்கள்கிழமை காலை 6 மணியில் இருந்து செவ்வாய்கிழமை காலை 6 மணி வரை தில்லியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களை 24 மணி நேரம் மூடுவது என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்தது. அதன்படி, தில்லியில் சுமார் 400 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன.
இது குறித்து தில்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் நிச்சல் சின்ஹானியா கூறுகையில் "தில்லி அரசுக் கெதிராக திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 400 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. 
ஆனால், எண்ணெய் நிறுவனங்களே நேரடியாகப் பெட்ரோலை விற்பனை செய்யும் சுமார் 15 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்பட்டன. இந்தப் போராட்டத்தால் சுமார் 65 லட்சம் லீட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படவில்லை. இதன் மூலம் சுமார் ரூ.55 கோடி வணிகம் பாதிக்கப்பட்டது. 
மேலும், இந்தப் போராட்டத்துக்கு பின்னணியில் பாஜக உள்ளதாக தில்லி முதல்வர் கூறுவது அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு ஆகும். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தில்லி மக்களே உள்ளனர் 'என்றார்.

"பாஜகவின் தூண்டுதலே காரணம்'
பாஜகவின் தூண்டுதலால்தான் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் தில்லியில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர்; எங்கள் ஆட்சிக்கு எதிராக போராடுமாறு அவர்கள் மிரட்டப்பட்டனர் என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கேஜரிவால் திங்கள்கிழமை தனது சுட்டுரை வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: 
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாவிட்டால், வருமான வரித் துறையின் மூலம் சோதனை நடத்தப்படும் என பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், பாஜகவினரால் மிரட்டப்பட்டனர். மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்களும் தெரிவித்திருந்தன. நான்கு பெருநகரங்களில் தில்லியில்தான் பெட்ரோல் விலை மிகவும் குறைவாக உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருந்த போதிலும் அங்கு பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதற்குக் காரணம் மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது' என்று அதில் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேஜரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "இந்த வேலைநிறுத்தப் போராட்டம் பாஜகவால் தூண்டிவிடப்பட்டது என்று பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் சிலர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாகவும், இப்போராட்டத்தை எண்ணெய் நிறுவனங்களும் ஆதரித்துள்ளன' என்றார்.

"லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்க வேண்டும்'
பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் போராட்டத்துக்கு, தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மனோஜ் திவாரி அளித்த பேட்டி: கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசின் அராஜகப் போக்கால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு தற்போது பெட்ரோலுக்கு வாட் வரியாக 27 சதவீதம் வசூலித்து வருகிறது. இதனால், லிட்டர் ஒன்றுக்கு வாட் வரியாக மட்டும் ரூ.17.56 வரை தில்லி அரசுக்குச் செல்கிறது. இதனால்தான் தில்லியில் பெட்ரோல் விலை மிக அதிகமாகவுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பல மாநில அரசுகள் விலைக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஆனால், மத்திய அரசின் வேண்டுகோளுக்கு தில்லி அரசு செவிசாய்க்கவில்லை. தில்லி அரசின் அலட்சியப் போக்கால் தில்லி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லி அரசு உடனடியாக லீட்டர் ஒன்றுக்கு ரூ.5 குறைக்க வேண்டும் என்றார் அவர்.

அழிவுப் பாதையை நோக்கி தில்லி செல்கிறது
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தில்லியில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்குச் சென்று அங்கே வேலை செய்பவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "போராட்டம், வேலை நிறுத்தம் செய்யாமல் மக்களின் நியாயமான கோரிக்கைகளை தில்லி முதல்வர் புரிந்து கொள்வதில்லை. தில்லி மக்கள் அவதிக்குள்ளானாலும், இந்தப் போராட்டம் தவிர்க்க முடியாததாகும். முதல்வர் கேஜரிவாலின் அராஜகரப் போக்கால் அழிவுப் பாதையை நோக்கி தில்லி செல்கிறது' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.