நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திறன் சந்தை: காண்போரைக் கவரும் கைவினைக் கலைஞர்களின் படைப்புகள்! 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

தில்லியில் தொடங்கி நடைபெற்று வரும் திறன் சந்தைக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களின்

News image
Updated On :15 ஜனவரி 2019, 12:10 am

வே.சுந்தரேஸ்வரன்

தில்லியில் தொடங்கி நடைபெற்று வரும் திறன் சந்தைக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களின் கைவினைக் கலைஞர்களின் கண்கவர் படைப்புகளும், தயாரிப்புகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின்கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனத்தின் சார்பில் தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள மாநில எம்போரியா வளாகத்தில் திறன் சந்தைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 20ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியைக் காண அனுமதி இலவசம்.
இக்கண்காட்சியில் சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் பல்வேறு அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தில்லி, உத்தரப் பிரதேசம், குஜராத், சண்டீகர், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், தெலங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், மிஸோரம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். 
இவற்றில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டுச் சாமான்கள், குளிருடைகளான சால்வைகள், ஆடைகள், தரை விரிப்புகள், சேலைகள், அழகுசாதன பொருள்கள், காதணிகள், வீட்டு அழகு சாதனப் பொருள்கள், மரச்சாமான்கள், மூங்கில் இருக்கைகள், பூந்தொட்டிகள் என பலவும் அதிக எண்ணிக்கையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட பல முக்கிய மாநிலங்களுக்கு உரிய பாரம்பரிய ஆடைகள் விதிவிதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
பாரம்பரிய உணவு அரங்குகள்: கண்காட்சி அரங்குகளை சுற்றிப் பார்க்க வரும் பார்வையாளர்களை பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழும் வகையில்,பிரத்யேக உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள், குஜராத், மகாராஷ்டிரம், பிகார், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களின் பாரம்பரிய உணவுகள் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படுகின்றன.
தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசை, வடை, பனியாரம், ஆகியவையும் ராஜஸ்தான் உணவு, குஜராத் உணவு , முகலாய உணவு வகைகள் பிரத்யேகமாக தயாரித்து விற்கப்படுகின்றன. அதன்படி, பல பதார்த்தங்களுடன்கூடிய ராஜஸ்தான் சாப்பாடு ரூ. 300-க்கும், குஜராத்தி சாப்பாடு ரூ. 100-க்கும் தனித்தனி அரங்குகளில் விற்கப்படுகின்றன.  டெரகோட்டா, வளையல், மண் பாத்திரங்கள், பீங்கான் சாமான்கள், செயற்கை காதணிகள், முத்து பதித்த வளையல்கள், தரை விரிப்புகள், செராமிக் பொருள்கள், தோல் பொருள்கள், சால்வைகள் ஆகியவற்றை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதைக் காண முடிந்தது.
இக்கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தத் திறன் சந்தைக் கண்காட்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. 
இக்கண்காட்சியில் 22 மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. அவர்களது தேவைக்காக கண்காட்சி நடைபெறும் நாள்களில் அவர்களுக்கு தினசரி ரூ.1,200 வழங்கப்படுகிறது.
மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவுகளை விற்பதற்கும் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் கிடைக்கும் வருமானம் முழுவதும் கைவினைக் கலைஞர்களுக்கு முழுமையாகச் செல்லும். ஏற்கெனவே ஆமதாபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இக்கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
கண்காட்சி ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாலை நேரங்களில் கலாசார நிகழ்ச்சிகளும் கண்காட்சி வளாகத்தில் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் பூவேலைப்பாடுகளுன்கூடிய ஆடைகளை விற்பனை செய்யும் ஒவைஸி அத்லாப் கூறுகையில், "தொடர்ந்து இக்கண்காட்சியில் பங்கேற்று கடை நடத்தி வருகிறேன். அரசு மிகுந்த ஊக்குவிப்பு அளித்து வருகிறது. நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது' என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.