நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நூறாண்டுகளுக்கு முந்தைய கும்பமேளாவின் அசல் ஆவணங்கள் கண்காட்சி!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பமேளா எத்தகைய ஏற்பாட்டில் நடத்தப்பட்டது என்பது தொடர்பான அசல்

News image
Updated On :17 மார்ச் 2019, 7:28 pm

வே.சுந்தரேஸ்வரன்

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பமேளா எத்தகைய ஏற்பாட்டில் நடத்தப்பட்டது என்பது தொடர்பான அசல் ஆவணங்கள் இடம் பெற்ற கண்காட்சி தில்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் நடைபெற்று வருகிறது.
 இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் 129-ஆவது நிறுவன தினத்தையொட்டி கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்தக் கண்காட்சி "கும்ப்' எனும் பெயரில் தொடங்கியது. தில்லி ஜன்பத்தில் உள்ள இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் வளாகக் கூடத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் கும்பமேளா தொடர்புடைய அசல் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 10-ஆம் தேதி வரைகண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.
100 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கும்பமேளாவின் போது காவல் துறை, சுகாதாரத் துறை, பொது சுகாதாரத் துறை, ரயில்வே துறை ஆகியவை மூலம் மேற்கொள்ளட்ட பல்வேறு ஏற்பாடுகள் தொடர்புடைய அசல் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அளவுக்கு அதிகமாக வரக்கூடிய யாத்ரீகர்கள் கூட்டத்தை இலகுவாக நிர்வகிப்பது, விரிவான திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான பல்வேறு துறைகளின் முயற்சிகளை கண்காட்சியின் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் வாயிலாக பார்வையாளர்கள் அறிந்துகொள்ள முடிகிறது.
 யுனெஸ்கோ அமைப்பின் கலாசார பாரம்பரிய பட்டியலில் கும்பமேளா இடம் பெற்றுள்ளது. மேலும், பாரம்பரியமாக ஹரித்துவார், அலகாபாத், நாசிக், உஜ்ஜைன் ஆகிய 4 இடங்களில் சுழற்சியின் அடிப்படையில் கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. உலகிலேயே அதிக மக்கள் கூடும் விழாக்களில் ஒன்றாகவும் கும்பமேளா திகழ்கிறது. 1930-ஆம் ஆண்டில் நடைபெற்ற கும்பமேளாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக யாத்ரீகர்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பான விவரங்கள் அடங்கிய அசல் ஆவணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
பிராயக்ராஜ் கும்பமேளா அண்மையில் வெகு சிறப்ப நடைபெற்ற நிலையில், இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில், தொடுதிரை கணினி வசதி மூலம் கும்பமேளா தொடர்புடைய பதிவுகளை பொதுமக்கள் தங்கள் விரல் நுனியில் தொட்டு அறிந்து கொள்ளலாம். இது தவிர, கண்ணாடிப் பேழைகளில் அலகாபாத், உஜ்ஜைன் ஆகிய இடங்களில் முதலாம் உலக போரின் போது நடைபெற்ற கும்பமேளாவுக்கான ஏற்பாட்டு உத்தரவுகள், ரயில் போக்குவரத்துக்கான வசதிகள் ஆகியவை குறித்த அசல் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்வையாளர்கள் பார்க்கும் போது கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பமேளா ஏற்பாடுகள் எந்த வகையில் செய்யப்பட்டிருந்தன என்பதை அறிய முடியும்.
கும்பமேளா என்பது ஏன்?: கும்பமேளா ஏன் கொண்டாடப்படுகிறது. அதனுடைய சிறப்பம்சம் என்ன போன்ற விவரங்கள் அச்சு வடிவில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தைப் பெறுவதில் நிகழ்ந்த போரின் போது, கும்பத்தில் இருந்த அமிர்தத்தில் சில துளிகள் பூமியில் உள்ள நாசிக், அலகாபாத், உஜ்ஜைன், ஹரித்துவார் ஆகிய இடங்களில் விழுந்தது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால், இந்த நான்கு புனித இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கும்பமேளா தொடர்புடைய தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.


தேசியக் கருவூலம்!
இந்திய தேசிய ஆவணக் காப்பகம், இந்தியாவின் பாரம்பரிய ஆவணங்களைப் பாதுகாத்து வருகிறது. 1891, மார்ச் 11-இல் கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் தலைநகர் 1911-இல் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாறியது. அப்போது, இந்த ஆவணக் காப்பகமும் தில்லிக்கு இடம் பெயர்ந்தது. தற்போதைய கட்டடம் 1926-இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் அனைத்து ஆவணங்களும் இக்கட்டடத்திற்கு 1937- ஆம் ஆண்டுக்குள் இடம் மாற்றப்பட்டன. தேசிய ஆவணக் காப்பகத்தின் பிராந்திய அலுவலகம் போபாலில் உள்ளது. மேலும், மூன்று ஆவணங்கள் மையம் புவனேசுவரம், ஜெய்ப்பூர், புதுச்சேரியில் அமைந்துள்ளது. இந்திய அரசின் மதிப்புமிக்க ஆவணங்களின் பாதுகாவலனாக இந்திய தேசிய ஆவணக் காப்பகம் திகழ்ந்து வருகிறது. பொது ஆவணங்கள் சட்டம் 1993-இன் ஒட்டுமொத்த வரம்பின் கீழ் இந்த நிறுவனம் ஆவணங்களைப் பாதுகாத்து வருகிறது.
இதுகுறித்து இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநர் பி.வி. ரமேஷ் கூறுகையில், "இந்திய தேசிய ஆவணக் காப்பகமானது தேசியக் கருவூலமாகத் திகழ்கிறது. 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆவணங்கள் இந்தக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் பரிமாற்ற ஆவணங்களும் உள்ளன. வரலாறு தொடர்புடைய விலை மதிப்பில்லாத ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மகாத்மா காந்தி தொடர்புடை ஆவணங்கள், இந்தியாவின் பாரம்பரியச் சிறப்பை வெளிப்படுத்தும் ஆவணங்கள் ஆகியவையும் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காப்பகம் மத்திய அரசின் கருவூலமாகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.