தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து: ஆம் ஆத்மியின் வாக்குறுதி தாக்கத்தை ஏற்படுத்துமா?
தலைநகர் தில்லியில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.


தலைநகர் தில்லியில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தில்லியில் மே 12-இல் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தலைநகரில் இது புதிதல்ல. ஏற்கெனவே, 2014 மக்களவை தேர்தலிலும் இதே கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
அப்போது, தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி இரண்டாமிடம் பெற்றது. காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால், 2015-இல் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வீறு கொண்டு எழுந்தது. தில்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. பாஜகவுக்கு மூன்று இடங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, 2017-இல் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மியால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. பெரும்பாலான இடங்களில் பாஜக வென்றது. ஆம் ஆத்மி இரண்டாம் இடத்திற்கும் காங்கிரஸ் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டன.
தில்லி வாக்காளர்கள் பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல், மாநகராட்சித் தேர்தல் என தேர்தலுக்கு ஏற்ப தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருவது கட்சி வேட்பாளர்களின் வெற்றியின் மூலம் தெரிய வருகிறது. மாநகராட்சி தேர்தலைப் பொருத்தமட்டில் பாஜக எப்போதும் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியைப் பார்த்து வாக்களிக்கும் மனப்போக்கும் இருந்து வருகிறது. பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தொடர்ந்து கிடைத்த வாய்ப்பு ஆம் ஆத்மி கட்சியின் வரவால் மாறிப் போயுள்ளது.
மன மாற்றத்தை ஏற்படுத்துமா? இந்நிலையில், தில்லி வாக்காளர்கள் இன்னும் 10 நாள்களில் வாக்களிக்க உள்ள இந்தத் தேர்தல் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அடுத்த ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதுதான் இதற்குக் காரணம். இந்தச் சூழலில், தில்லி மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்வைத்திருக்கும் முழு மாநில அந்தஸ்து வாக்குறுதி வாக்காளர்களிடம் எத்தகைய மனமாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.
"தில்லி மக்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சியையும் முழுமையாகப் பெற மாநில அரசுக்கு முழு அதிகாரம் கிடைக்கக்கூடிய வகையில் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்தை பெற்றாக வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப ஆம் ஆம் சார்பில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்' என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் முழங்கி வருகிறார்.
"சாத்தியமற்ற வாக்குறுதி': ஆனால், இது சாத்தியமில்லை என காங்கிரஸும், பாஜகவும் பிரசாரம் செய்து வருகின்றன. "நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆம் ஆத்மிக்கு ஏழு எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் ஐந்து ஆண்டுகாலம் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. தில்லியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகள், திட்டப் பணிகளையும் செய்யாமல் மக்களைத் திசை திருப்பும் வகையில் வெற்று வாக்குறுதியை கேஜரிவால் அளித்துள்ளார். இது ஒரு பொய் வாக்குறுதி' என காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவரும், முன்னாள் முதல்வரும் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டி வருகிறார்.
இதேபோல, "கேஜரிவால் கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த திட்டப் பணிகளையும் தில்லியில் செய்யவில்லை. மக்களைத் திசை திருப்பவும், தனது அரசின் தவறுகளை மறைக்கவும் அவர் முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுத்துள்ளார். தற்போதைய அதிகாரமே அனைத்து வசதிகளையும் தில்லி மக்கள் பெறுவதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது' என்று பாஜகவின் தில்லி தலைவரும், வடகிழக்கு தில்லி தொகுதியின் எம்பியுமான மனோஜ் திவாரி கூறுகிறார்.
யதார்த்த நிலையைப் பார்த்தால், தில்லி மற்ற யூனியன் பிரதேசங்களில் இருந்து மாறுபட்டதாக உள்ளது. தலைநகர் அந்தஸ்தை பெற்றிருப்பதாலும், ராணுவ அமைப்புகளின் தலைமையகங்கள், பாதுகாப்பு அமைப்புகளின் அலுவலகங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், அமைச்சகங்கள் உள்ளிட்டவை இங்கு அமைந்துள்ளன. இவைதான் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதில் சிக்கலாக இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் காவல் துறையும், தில்லி வளர்ச்சி ஆணையமும் (டிடிஏ) வர வேண்டும் என்பது ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை. ஆனால், இதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் சட்டம் இயற்றப்பட வேண்டும். இது தெரிந்தும் கேஜரிவால் இந்த கோரிக்கையை முன் வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
நீண்டகால லாப நோக்கம்? தில்லியில் ஏற்கனவே குடிநீர், மின்சாரம், மருத்துவம் ஆகிய விவகாரங்களில் சில நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், அது இந்தத் தேர்தலில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை அக்கட்சி முன்வைத்திருப்பது, நீண்டகால அரசியல் லாப நோக்கம்தான் என்கின்றனர் அவரது எதிர்தரப்பினர்.
கடந்த நான்கரை ஆண்டு காலமாகவே தில்லி முதல்வருக்கும், துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் அதிகார மோதல் நீடித்து வருகிறது. துணைநிலை ஆளுநர் மாறிய போதிலும் அதிகார மோதல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. உயர் அதிகாரிகளை நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வது, முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் அதிகாரத் தலையீடு இருப்பதாக ஆம் ஆத்மி கருதுகிறது. இதனால், முழு மாநில அந்தஸ்து விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக அக்கட்சி கூறுகிறது. ஆனால், முழு மாநில அந்தஸ்து சாத்தியமில்லை என்பதில் காங்கிரஸும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுகின்றன. இதுவும் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடையக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், முழு மாநில அந்தஸ்து கோரிக்கை இத்தேர்தலில் எடுபடுமா என்பது ஆம் ஆத்மி கட்சி பெறும் வெற்றியைப் பொருத்தே அமையும். தில்லிவாசிகளின் வாக்குகள் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் உறுதியானவையாஅல்லது வெற்று வாக்குறுதிகளா என்பதை மே 23-இல் வெளியாகும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...