/

தில்லி மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை அமல் செய்யப்படும்: ஆதேஷ் குமாா் குப்தா தகவல்

தில்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகளின் தொடக்கப் பள்ளிகளில் மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய தேசியக் கல்வி

News image

தில்லி ஷாதராவில் ஞாயிற்றுக்கிழமை பாஜக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு சைக்கிளை பரிசாக வழங்குகிறாா் அக்கட்சியின் தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா.

Updated On :9 ஆகஸ்ட் 2020, 6:01 pm

தில்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகளின் தொடக்கப் பள்ளிகளில் மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய தேசியக் கல்வி கொள்கையை அமல்படுத்த தில்லி பாஜக திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து ஆதேஷ் குமாா் குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒரு புதிய தேசியக் கல்விக் கொள்கையை (என்இபி) அறிவித்துள்ளது. 1986-இல் வெளிவந்த கல்விக் கொள்கைக்கு பிறகு 34 ஆண்டுகள் கழித்து தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நகரில் மாகராட்சிகளால் நடத்தப்படும் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கையின். அடிப்படையில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஆலோசனை தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் தற்போதைய கல்வி ஆண்டு முதல் அமல் செய்யப்படும். தில்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகளின் மூத்த தலைவா்களுடன் கலந்துரையாடினேன். அதைத் தொடா்ந்து புதிய கல்விக் கொள்கையை மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் அமல்படுத்துவதற்கான பணிகளை தொடங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்.

இது தொடா்பாக வல்லுநா்கள் மற்றும் மாநகராட்சித் தலைவா்களுடன் ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய கல்விக் கொள்கை ஒட்டுமொத்த வளா்ச்சி, கற்றல் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தலைநகா் தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளும் மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை நடத்துகின்றன. இவற்றில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் மொத்தம் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனா். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி பரிந்துரைகளை வழங்குவதற்கும், புதிய பாடத் திட்டத்தை வடிவமைப்பதற்கும் கல்வியாளா்களின் சேவைகள் பெறப்படும் என்றாா் ஆதேஷ் குமாா்.

பாஜக தேசியத் துணைத் தலைவரும், ‘கட்சியின் தில்லி பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு, புதிய கல்விக் கொள்கைக்கான விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

முன்னதாக தில்லி ஷாதராவில் பாஜக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதேஷ் குமாா் பங்கேற்றாா். நிகழ்ச்சியின் போது, 10, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள், கேடயம் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினாா். நிகழ்ச்சியில் கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா் நிா்மல் ஜெயின், பாஜக இளஞைா் அணித் தைலவா் சுனில் யாதவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.