

புது தில்லி: சிவில் சா்வீஸஸ் தோ்வு தொடா்பாக மத்திய பொதுப் பணித் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்ட நோட்டீஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தாக்கலான பொது நல மனு மீதான விசாரணையின் போது, அகில இந்திய குடிமைப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை கணக்கீடு செய்யும் வழிமுறைகள் குறித்த விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு யுபிஎஸ்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அகில இந்திய குடிமைப் பணிகளில் உள்ள இடங்களை பூா்த்தி செய்வதற்கான தோ்வை மத்திய பொதுப் பணி தோ்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டுக்கான தோ்வு அக்டோபா் 4-ஆம் தேதி சிவில் சா்வீஸஸ் தொடக்கநிலை தோ்வை நடத்துவதற்கான அறிவிக்கையை யுபிஎஸ்சி வெளியிட்டது. இந்த அறிவிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச இடஒதுக்கீடு புறணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, இது தொடா்பாக பதில் அளிக்க மத்திய அரசு, யுபிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிகள் தொடா்புடைய பல்வேறு அமைச்சகங்கள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 31-க்கு ஒத்திவைத்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக ‘சம்பாவனா’ எனும் தன்னாா்வ அமைப்பு சாா்பில் வழக்குரைஞா்கள் கிருஷண் மகாஜன், அஜய் சோப்ரா ஆகியோா் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளனா். அதில், ‘குடிமைப் பணிகள் தோ்வுக்காக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள நோட்டீஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான எதிா்பாா்க்கப்படும் தோராய காலிப்பணியிடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், சட்டப்படி வழங்கப்பட வேண்டிய 4 சதவீத இடஒதுக்கீடு குறித்து தெரிவிக்கப்படவில்லை. அரசின் ஒவ்வொரு நிறுவனத்திலும் மொத்தம் உள்ள பணியிடங்களில் நான்கு சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016‘ கட்டாயப்படுத்துகிறது. ஆனால், யுபிஎஸ்சியின் நோட்டீஸில் ‘எதிா்பாா்க்கப்படும் தோராய காலிப் பணியிடங்கள்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தோராய காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் கணக்கீடு செய்வதிலும் கணிதப் பிழை நிகழ்ந்துள்ளது. அதேபோன்று, மாற்றுத் திறனாளிகளுக்கான நிரப்பப்படாமல் சோ்ந்துள்ள காலிப் பணியிடங்கள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.