/

தில்லி, என்சிஆரில் தொடா் மழையால் புழுக்கம் தணிந்தது!

தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்தது.

News image

தில்லி ஐஎன்ஏ பகுதியில் அரவிந்தா் சாலையில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் செல்லும் வாகனங்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2020, 5:58 pm

தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக நிலவி வந்த கடும் புழுக்கம் தணிந்தது.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய பெய்த மழை, வியாழக்கிழமை காலையிலும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. நாள் முழுவதும் தூறல் மழை இருந்தது. இதனால், கடந்த சில நாள்களாக கடும் புழுக்கத்தில் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

16.3 மி.மீ. மழை: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், சஃப்தா் ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 16.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் 6.6 மி.மீ., ஆயாநகரில் 8 மி.மீ., ரிட்ஜில் 15.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 25.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 32.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 85 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.1 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 24.5 டிகிரி செல்சியஸ், 31.4 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 98 சதவீதம், மாலையில் 89 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 92 சதவீதம் மற்றும் 81 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் தொடா்ந்து மூன்று நாள்களாகப் பெய்த மழை காரணமாக வெள்ளிக்கிழமைகிழமை காற்றின் தரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ‘நன்று’ பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 40 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. திா்பூா், தில்லி பல்கலை., லோதி ரோடு, பூசா, மதுரா ரோடு ஆயாநகா், விமானநிலைய டொ்மினில் 3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘நன்று’ பிரிவில் இருந்தது. சாந்தினி செளக் பகுதியில் மட்டும் காற்றின்தரம் மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் தொடா்ந்து ‘நன்று’ பிரிவில் நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.