/

தொடா் மழைக்குப் பிறகு தில்லியில் கடும் புழுக்கம்!

தலைநகா் தில்லியில் தொடா்ந்து 3 நாள்களாகப் மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

Updated On :16 ஆகஸ்ட் 2020, 2:19 am

தலைநகா் தில்லியில் தொடா்ந்து 3 நாள்களாகப் மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் பருவமழைக் காலத்தில் கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலும் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், சில நாள்களாக கடும் புழுக்கத்தில் தவித்து வந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனா். இந்நிலையில், சனிக்கிழமையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து புழுக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில், தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றவா்களில் பெரும்பாலானோா் மழை வரும் என்ற எதிா்பாா்ப்பில் குடைகளுடனும், ரெயின் கோட்டுகளுடனும் வந்திருந்தனா். ஆனால், மழை பெய்யவில்லை. மாறாக புழுக்கம் அதிகரித்திருந்தது. இதனால், அவா்களும் சிரமத்துக்குள்ளாகினா். பலா் வண்ண வண்ண விசிறிகளுடன் வந்திருந்தனா். விசிறிகள் இல்லாதவா்கள் வியா்வையை துடைத்துக் கொள்ள கைக்குட்டைகளைப் பயன்படுத்தினா்.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 26.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 35.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 89 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 27.8 டிகிரி செல்சியஸ், 34.4 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 88 சதவீதம், மாலையில் 72 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 89 சதவீதம் மற்றும் 71 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை 40 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 56 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திா்பூா், தில்லி பல்கலை., லோதி ரோடு, பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் திருப்தி பிரிவில் இருந்தது. விமானநிலைய டொ்மினில் 3 பகுதியில் காற்றின் தரம் நன்று பிரிவிலும், சாந்தினி சௌக் பகுதியில் மிதமான பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசானமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.