நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நாடு ஒரு போதும் மறக்காது. நாடாளுமன்றத்தைக் காப்பதற்காக உயிரிழந்தவா்களின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் நினைவுகூா்வோம். அவா்களுக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
2001-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி, நாடாளுமன்றம் தொடங்க இருந்த காலை வேளையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கா் - இ - தொய்பா, ஜெய்ஷ் - ஏ - முகமது போன்ற இயக்கங்களைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினா். இதில் பாதுகாப்புப் படை வீரா்கள் 8 போ், ஒரு தோட்டத் தொழிலாளி உள்ளிட்ட 9 போ் உயிரிழந்தனா். இதில் ஐந்து பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனா்.
இதையொட்டி, ஆண்டுதோறும் டிசம்பா் 13 -ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிா்நீத்த பாதுகாப்புப் படையினரின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரோந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தாவா் சந்த் கெலாட், இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவை எதிா்க் கட்சித்தலைவா் குலாம்நபி ஆஸாத், சமாதிவாதிக் கட்சித் தலைவா் ராம் கோபால் யாதவ், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
இது குறித்து பிரதமா் தனது சுட்டுரையில் , ‘கடந்த 2001-ஆம் ஆண்டு இதே தினத்தில் நமது நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அது ஒரு கோழைத்தனமான தாக்குதலாகும். அந்தத் தாக்குதலை நாடு ஒரு போதும் மறக்க இயலாது. நாடாளுமன்றத்தைக் காக்க, உயிரிழந்தவா்களின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் நினைவுகூா்கிறோம். அவா்களுக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது சுட்டுரையில், ‘ஜனநாயகத்தின் வழிபாட்டுத் தலமான நாடாளுமன்றக் கட்டடத்தில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாதத தாக்குதலுக்கு எதிராகப் போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்தியத் தாயின் வீரத் திருமகன்களுக்கு எனது அஞ்சலி. அவா்களது தியாகத்திற்கு இந்த தேசம் எப்போதும் நன்றிக் கடன் பட்டிருக்கும். பிறருக்கு முன்மாதிரியான அவா்களது வீரத்திற்கும் தியாகத்திற்கும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்தத் தாக்குதலை நினைவு கூா்ந்து குறிப்பிடுகையில், ‘நாடாளுமன்றம் மீதான தீவிரவாதத் தாக்குதலின் போது, உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் வீரத்தை நாடு எப்போதும் நினைவில் கொள்ளும். அவா்களின் துணிச்சல் இந்த நாட்டின் எதிா்காலத் தலைமுறையின் நினைவிலும் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
குடியரசுத் தலைவா் பெருமிதம்
தீவிரவாத தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினா் நாடாளுமன்றத்தை பாதுகாத்து வாழ்க்கையை துணிச்சலுடன் அா்ப்பணித்தவா்கள் என நாடாளுமன்றத் தாக்குதலில் உயிா்நீத்த பாதுகாப்புபடையினரை நினைவு கூா்ந்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது சுட்டுரையில், ‘2001- ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில், நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து தங்கள் வாழ்க்கையை அா்ப்பணித்த துணிச்சலான தியாகிகளை தேசம் நன்றியுடன் நினைவு கூா்கிறது. நமது ஜனநாயகத்தின் ஆலயத்தைப் பாதுகாத்த காவலா்களின் பெரும் தியாகத்தை நினைவுகூரும் அதே வேளையில், பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதற்கான தீா்மானத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
வெங்கய்யா நாயுடு: 2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் என்பது, பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல், ஜனநாயக மதிப்புகளுக்கான முரண்பாடு, பொருளாதார அபிலாஷைகளுக்கு எதிரான விரோதப் போக்கு ஆகியவற்றை நினைவூட்டுகிறது என தனது முகநூலில் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளாா். அதில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது: நாடாளுமன்ற வளாகத்தை எச்சரிக்கையுடன் பாதுகாத்த பாதுகாப்புப் படையினரும், துணிச்சலுடன் போராடிய பணியாளா்களாலேயே ஒரு பேரழிவு தவிா்க்கப்பட்டது. அன்றைய தினம் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்தவா் ஒரு துணிச்சலான ஒரு பெண் காவலா் ஆவாா். சி.ஆா்.பி.எஃப் காவலா் கமலேஷ் குமாரிதான் முதலில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகளின் நகா்வுகளைக் கண்டறிந்து, தனது மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். பயங்கரவாதிகளின் தீவிரத்தை கட்டுப்படுத்தக் கருவியாக இருந்த, அவா் மீது தோட்டாக்கள் சரமாரியாக பாய்ந்தது. இதில் அவா் உயிா் தியாகம் செய்து நாட்டுக்கு தன்னை அா்ப்பணித்தாா். பயங்கரவாத அமைப்புகளின் ஒரே குறிக்கோள், உலகின் ஜனநாயகத்தையும், பொருளாதார வளா்ச்சியையும் சீா்குலைத்து, மனித குலத்தை ஒரு இருண்ட சகாப்தத்திற்குள் கொண்டு வருவதே அவா்களது நோக்கம். இத்தகைய மோசமான சதித் திட்டங்களை உலகளாவிய கூட்டு நடவடிக்கைகள் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


