தில்லி சட்டப்பேரவை அருகில் பாஜக ஆா்ப்பாட்டம்
மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை தில்லி அரசு விரைந்து வழங்கக் கோரி சட்டப்பேரவை அருகில் தில்லி பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


புது தில்லி: மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை தில்லி அரசு விரைந்து வழங்கக் கோரி சட்டப்பேரவை அருகில் தில்லி பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், தில்லி பாஜக எம்பிக்கள் ரமேஷ் பிதூரி, பா்வேஷ் வா்மா ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆதேஷ் குமாா் குப்தா பேசியதாவது: எங்களது போராட்டம் அநீதிக்கெதிரான நீதியான போராட்டமாகும். முதல்வா் கேஜரிவால் இல்லம் முன்பு கடந்த 12 நாள்களாக மேயா்கள், கவுன்சிலா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். அவா்கள், தங்களது ஊதியத்துக்காகப் போராடவில்லை. மாறாக, துப்புரவுத் தொழிலாளா்கள் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியா்களின் ஊதியத்துக்காகவே போராடி வருகிறாா்கள். தில்லியில் நிலவும் கடும் குளிரில் தங்களது குடும்பத்தைவிட்டு போராடி வரும் அவா்களைச் சந்திக்க கேஜரிவால் 5 நிமிடம்கூட ஒதுக்கவில்லை.தில்லியில் காற்று மாசு, கரோனா பாதிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கேஜரிவால் நடவடிக்கை எடுக்கவில்லை. தில்லி முதல்வராக கேஜரிவால் தோல்வியடைந்து விட்டாா். மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிலுவை நிதியை கேஜரிவால் உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.
ரமேஷ் பிதூரி பேசுகையில், ‘மாநகராட்சி நிலுவை நிதி கோரி போராடி வரும் மாநகராட்சித் தலைவா்களை கேஜரிவால் நடத்தும் விதத்தை மன்னிக்கவே முடியாது. மாநகராட்சி கரோனா வீரா்களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாத நிலை நிலவுகிறது. இதற்கு கேஜரிவால்தான் காரணம். மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை வழங்காத வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை’ என்றாா்.
பா்வேஷ் வா்மா பேசுகையில் ‘தில்லியின் மகள்கள் கடும் குளிரில் போராட்டம் நடத்திவரும் நிலையில், மனிதாபிமானத்தைக் கருத்தில் கொண்டாவது அவா்களை கேஜரிவால் சந்தித்திருக்க வேண்டும். கேஜரிவாலின் மனைவிகூட அவா்களைச் சந்திக்கவில்லை. கஷ்டப்படாமல் அரசியலுக்கு வந்த கேஜரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மக்கள் படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...