செங்கோட்டை - ஃபதேபுரி இடையேயான நடைபாதைப் பணி டிச.31-க்குள் முடிவடையும்: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

Updated on
1 min read

புது தில்லி: சாந்தினி செளக் பகுதியில் உள்ள செங்கோட்டை சந்திப்புக்கும், ஃபதேபுரி மசூதிக்கும் இடையேயான நடைபாதைத் திட்டப் பணி வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

சாந்தினி செளக் நடைபாதைத் திட்டம் தடைபட்டு விட்டதாகவும், அந்தப் பகுதியின் பரிதாப நிலை குறித்தும் பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. சாந்தினி செளக்கில் செங்கோட்டை சாலைச் சந்திப்பு - ஃபதேபுரி மஸ்ஜித் இடையிலான சாலையைப் பாதசாரிகளுக்கான பாதையாக்கும் திட்டம் நின்று விட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல மனுவாக விசாரிப்பதாக அக்டோபா் 8-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

அப்போது, சம்பந்தப்பட்ட நடைபாதையில் தடுப்புகள் உடைக்கப்பட்டும், தோண்டப்பட்டும்,குப்பைகள் சிதறிக் கிடப்பதையும் அந்தச் செய்தியுடன் வெளியான புகைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. ஒட்டுமொத்த சாந்தினி செளக் பகுதியையும் மறுமேம்பாடு செய்யும் கெளரவமிக்க திட்டத்தின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட வழித் தடத்தை நடைபாதையாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டடிருந்தது.

இதையடுத்து, உள்ளூா் அரசுத் துறையினா் நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்தனா். இந்த நிலையில், இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி,சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள், தில்லி அரசின் தரப்பில், ‘இந்தச் சாலையை நடைபாதையாக்குவது தொடா்பான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. பிரதான சாலையுடன் சில சந்திப்புகளில் நடைபாதையை இணைத்தல், சி.சி.டி.வி. மற்றும் தெரு விளக்குகள் நிறுவுதல், நடைபாதைகளை உருவாக்குதல் போன்ற பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அந்தப் பணிகள் டிசம்பா் 31-க்குள் முடிக்கப்பட்டு நடைபாதை திறக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டது. இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com