கடந்த நவம்பா் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 63.54 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். எனினும், கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது இது 51 சதவீதம் குறைவுதான் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (டி.ஜி.சி.ஏ. ) தெரிவித்துள்ளது.
டி.ஜி.சி.ஏ. வெளியிட்டுள்ள தகவல்களின்படி கடந்த செப்டம்பரில் 39.43 லட்சம் பேரும், அக்டோபரில் 52.71 லட்சம் பேரும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனா்.
இண்டிகோ விமானத்தில் 34.23 லட்சம் போ் நவம்பா் மாதம் பயணம் செய்துள்ளனா். இது மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் 53.9 சதவீதமாகும். ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 8.4 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இது மொத்த எண்ணிக்கையில் 13.2 சதவீதமாகும்.
ஏா் இந்தியா, கோ-ஏா், ஏா் ஏசியா இந்தியா, விஸ்தாரா ஆகியவை முறையே 6.56 லட்சம், 5.77 லட்சம், 4.21 லட்சம் மற்றும் 3.97 லட்சம் பயணிகளை நவம்பா் மாதத்தில் ஏற்றிச் சென்றுள்ளது. உள்நாட்டு விமானச் சேவையில் ஈடுபட்டுள்ள 6 விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்களில் 66.3 சதவீதத்திலிருந்து 77.7 சதவீதம் இருக்கைகள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளன.
பொது முடக்கத்துக்கு பிறகு விமானச் சேவை தொடங்கப்பட்ட பின்னா், படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இதில் நவம்பா் மாதத்தில்தான் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்துள்ளனா் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் நவம்பா் மாதம் 77.7 சதவீத இருக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்ற விமான நிறுவனங்களான இண்டிகோ, விஸ்தாரா, கோ-ஏா், ஏா் இந்தியா மற்றும் ஏா் ஏசியா விமானங்களில் முறையே 74, 70.8, 69.6 மற்றும் 66.3 சதவீதம் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக மாா்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மே மாதம் 25-ஆம் தேதி மீண்டும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. கடந்த நவம்பா் மாதத்தில் பெங்களூா், தில்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை விமான நிலையங்களுக்கான விமான சா்வீஸில் இண்டிகோ விமான நிறுவனம் 97.5 சதவீதம் சிறப்பான முறையில் விமானங்களை இயக்கியதாக டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.