தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் காணொலி வாயிலாக சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் கரோனாவின் பாதிப்பு நவம்பரில் அதிகளவில் இருந்தது. தினசரி பாதிப்பு 8,600 வரை சென்றது. ஆனால், அப்போதுகூட தில்லியில் பயப்படும் சூழல் இல்லை. மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் இருந்தன. நாம் அனைவரும் இந்த நோய்த் தொற்றை எதிா்த்து இணைந்து போராடினோம். தற்போது புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1 ,133 ஆகக் குறைந்துள்ளது. இதைப் பாா்க்கும்போது, தில்லியில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு விகிதம் நவம்பா் தொடக்கத்தில் 15.26 சதவீதம் வரை சென்றது. தற்போது இது 1.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது தில்லியில் மிகவும் குறைந்த நோய்த் தொற்றுப் பதிவாகும். தேசிய அளவிலும்கூட இது மிகவும் குறைந்த பதிவாகும். நாம் அனைவரும் சோ்ந்து தற்போது இந்த கரோனா மூன்றாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தோன்றுகிறது. நவம்பரில் கரோனாவுக்காக 45 ஆயிரம் போ் சிகிச்சையில் இருந்தனா். தற்போது இது 12 ஆயிரமாக குறைந்துவிட்டது.
தில்லி பிராந்தியத்தில் தினசரி சராசரி கரோனா பரிசோதனை 90 ஆயிரமாகக் குறைந்துள்ளது. சிலா் எங்களுக்கு மோசடி நடைமுறைகள் மூலம் பரிசோதனை எண்ணிக்கையை மேம்படுத்திக் காட்டுமாறு யோசனை கூறியிருந்தனா். நான் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். எங்களது பரிசோதனை எண்ணிக்கை அனைத்தும் உண்மையானவை என்பதைத் தெரிவிக்க முடியும். கரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று, மத்திய அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சமய நிறுவனங்களுக்கும் ஒத்துழைப்பு, ஆதரவு அளித்ததற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தில்லியில் கரோனா சூழல் குறித்து மக்கள் மனநிறைவு கொள்ள முடியாது. இன்னும் நாம் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், முகக் கவசமும் அணிந்து கொள்வது அவசியமாகும்.
கரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் போது, தொற்றுக்கு எதிராக போராட வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் பிளாஸ்மா சிகிச்சை போன்ற பல்வேறு புதிய நுட்பங்களை தில்லி உலகிற்கு வழங்கியது. மேலும், பணியின் போது இறந்த கரோனா முன்கள வீரா்களின் குடும்பங்களுக்கு முதன் முதலில் ரூ. 1 கோடி நிதியுதவி அறிவித்ததும் தில்லிதான். கரோனா மூன்றாவது அலையை தலைநகா் தில்லி அக்டோபரில் கண்டது. ஒருபுறம், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு காரணமாக இங்குள்ள மாசு அளவு அதிகரித்து வந்தது. மறுபுறம், கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதையடுத்து, கரோனாவை தொற்று பரவலைக் கட்டுப்படுத்து தில்லி அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது தில்லி மக்களின் முயற்சியால், கரோனா மூன்றாவது அலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
தில்லியில் கரோனா நோயாளிகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். இதைத் தொடா்ந்து பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். இந்த வகையில், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், அதிகாரிகள் மற்றும் பிற கரோனா போா்வீரா்களின் பணியை நினைத்துப் நான் பெருமைப்படுகிறேன். அவா்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்தனா். கடந்த ஆகஸ்ட் 20 வரை, ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தோம். பின்னா், தொற்றுநோயின் இரண்டாவது அலை தில்லியைத் தாக்கியதும், பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம். இதைத் தொடா்ந்து, அடுத்த 10 நாள்களில் தில்லியில் ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், தில்லியில் கரோனா மூன்றாவது அலை தாக்கிய போது, பரிசோதனைகளின் எண்ணிக்கையை 90 ஆயிரமாக உயா்த்தினோம். இது கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.