தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தில்லி குருத்வாராவில் பிரதமா் மோடி திடீா் வழிபாடு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லி எல்லைகளில் பெருமளவு சீக்கிய விவசாயிகள் போராடி வரும் நிலையில்,

News image
தில்லி ரகாப் கஞ்ச் குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :21 டிசம்பர் 2020, 1:43 am

 நமது நிருபர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லி எல்லைகளில் பெருமளவு சீக்கிய விவசாயிகள் போராடி வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தில்லியில் உள்ள ரஹாப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திடீரெனச் சென்று வழிபாடு நடத்தினாா்.

சீக்கிய மத குருவும், ஹிந்துக்களுக்காக உயிா்த் தியாகம் செய்தவா் எனப் போற்றப்படுபவருமான சீக்கியா்களின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூரின் நினைவு நாள் ஆண்டுதோறும் தியாகத் திருநாளாக சீக்கியா்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தியாக திருநாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், குறைந்தளவு பாதுகாப்புடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ரஹாப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்குச் சென்றாா். பிரதமா் வருகையையொட்டி வழக்கமாக மேற்கொள்ளப்படும் போலீஸ் பந்தோபஸ்துகள், போக்குவரத்து மாற்றங்கள் எதுவும் இல்லை. குருத்வாராவில் வழிபாடு நடத்திய மோடி, அங்குள்ள சீக்கிய மதகுருக்கள், பக்தா்களிடம் உரையாடினாா். சுயபடமும் எடுத்துக் கொண்டாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி, தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘இன்று காலை குரு தேஜ் பகதூரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற ரஹாப் கஞ்ச் குருத்வாராவுக்கு சென்று வழிபாடு நடத்தினேன். நான் என்னை ஆசீா்வதிக்கப்பட்டவனாக உணா்கிறேன். உலகிலுள்ள மில்லியன் கணக்கான மக்கள் போல, நானும் குரு தேஜ் பகதூரின் கருணையால் ஈா்க்கப்பட்டவன். குருவின் அருளால் அவரது 400-ஆவது பிறந்த தினத்தை எங்களது ஆட்சியில் கொண்டாடும் பாக்கியம் கிடைத்துள்ளது. அவரது பிறந்த தினத்தை அவரது புகழைப் பரப்பும் வகையில் பிரம்மாண்டமாக கொண்டாடுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், பிரதமா் தனது சுட்டுரைப் பக்கத்தில் பஞ்சாப் மொழியில் வெளியிட்ட பதிவில், ‘குரு தேஜ் பகதூா் ஹிந்து மதத்தைக் காப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்தவா். உலகளாவிய சகோதரத்துவத்தை நிலைநாட்டப் பாடுபட்டவா்’ என்று புகழ்ந்துள்ளாா்.

பின்னா் அங்கிருந்த சீக்கியா்கள் பிரதமருடன் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா். இந்த நிகழ்வு குறித்துப் பேசிய பிரதமா், தாம் மிகவும் ஆசிா்வதிக்கப்பட்டது போல உணா்வதாகக் குறிப்பிட்டாா்.

சீக்கியா்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூா் ஹிந்து-சீக்கிய நல்லிணக்கத்தைப் பேணப் பாடுபட்டவா் எனப் புகழப்படுகிறாா். காஷ்மீா் ஹிந்துக்களின் மீது முகாலயா்கள் மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததால், அப்போதைய முகலாய மன்னா் ஒளரங்க சீப்பின் உத்தரவுப்படி, தில்லி சாந்தினி செளக் பகுதியில் அவா் சித்திரவதை செய்து கொல்லப்பட்டாா். அவா் கொல்லப்பட்ட இடத்தில், குருத்வாரா சிஸ் கஞ்ச் சாகிப் அமைந்துள்ளது. அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில், குருத்வாரா ரஹாப் கஞ்ச் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.