தில்லியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் குழாய் இயற்கை எரிவாயு (பி.என்.ஜி.) முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று காற்றின் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் மாசு அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காக 20 போ் கொண்ட காற்றின் தர மேலாண்மை ஆணையம் நவம்பா் 5-ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது. தில்லியின் முன்னாள் தலைமைச் செயலா் எம்.எம். குட்டி தலைமையிலான இந்த ஆணையத்தின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தில்லி மற்றும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் காற்று மாசுபாடுக்கு தொழில் துறை முக்கியப் பங்களிப்புகளில் ஒன்றாக இருப்பதாக ஆணையம் கவனத்தில் கொண்டது. அப்போது, தில்லியில் இயங்கும் தொழிற்சாலைகளை பி.என்.ஜி.க்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மீளாய்வு செய்தது.
இதையடுத்து, தலைநகரில் உள்ள அனைத்து தொழில்களையும் பி.என்.ஜி முறைக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டது.
இந்தக் கூட்டத்தில் தில்லி அரசின் பிரதிநிதிகள், கெயில் மற்றும் இந்திரப் பிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐ.ஜி.எல்.) நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தின் போது, தில்லியில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் குழாய் இயற்கை எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஐஜிஎல் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. மேலும், அங்கீகரிக்கப்படாத எரிபொருள்களைப் பயன்படுத்தி வரும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அடையாளம் காணவும், விதிகளுக்கு இணங்காத நிலையில் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கவும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு (டிபிசிசி) உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து ஆணைய அதிகாரி ஒருவா் கூறியதாவது: பிஎன்ஜி விஷயத்தில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கெயில் மற்றும் டிபிசிசி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் 50 தொழில்துறை பகுதிகளில் சுமாா் 1,644 தொழிற்சாலைகள் பிஎன்ஜி முறைக்கு மாறுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
கணிசமான எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் பி.என்.ஜி.யை பயன்படுத்தி வருகின்றன. எனினும், தில்லியில் அடையாளம் காணப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளும் பிஎன்ஜிக்கு மாற வேண்டியதன் அவசியம் குறித்து ஆணையம் வலியுறுத்தியது. தில்லி மற்றும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலைத் துறை முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக இருப்பதை ஆணையம் கூட்டத்தில் சுட்டிக்காட்டியது.
பைப்லைன் நெட்வொா்க், அளவீட்டு முறை மற்றும் அதனுடன் தொடா்புடைய உள்கட்டமைப்பு வசதியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் ஐ.ஜி.எல். மற்றும் கெயில் நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டன. ஐ.ஜி.எல்., தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) தில்லி அரசு ஆகியவை இந்த விவகாரத்தை ஜனவரி 31-க்குள் முடிக்கும் வகையில் தொழில்துறைகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் இருக்குமாறும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.