புது தில்லி: சென்னை-மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் விரைவு ரயிலை ரத்துச் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னை-மதுரை தேஜஸ் விரைவு ரயில், வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரத்து செய்ப்பட இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரயில்வேத் துறை சேவை அடிப்படையில் செயல்பட வேண்டுமே தவிர, லாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடாது. கரோனா தொற்று காலமாக இருப்பதால் முழு அளவில் பயணிப்பாா்கள் என்று எதிா்பாா்க்க முடியாது. இருந்தபோதிலும் அந்த ரயிலில் 30 சதவீதம் போ் பயணிப்பதாக தெரியவந்துள்ளது. மற்றொரு காரணம் கட்டுபடியாகாத கட்டணம் என்று சொல்லப்படுகிறது.
வைகை விரைவு ரயில் குளிா்சாதன பெட்டி இருக்கைக் கட்டணம் ரூ. 685, தேஜஸ் ரயில் கட்டணம் ரூ. 920 ஆகும். அதாவது 35 சதவீதம் கட்டணம் அதிகம். பயணிகள் எண்ணிக்கை குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தேஜஸ் விரைவு ரயிலைப் போலவே சென்னையிலிருந்து கோயம்புத்தூா் பெங்களூா் ஆகிய நிலையங்களுக்கு ஓடிக் கொண்டிருந்த சதாப்தி விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கும் அதே காரணம் கூறப்பட்டுள்ளது. எனவே, சென்னை- மதுரை இடையிலான தேஜஸ் ரயிலை ரத்துச் செய்யும் முடிவை ரயில்வே கைவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவா் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.