/

கான்பூா் குழந்தைகள் காப்பக மைனா் சிறுமிகளுக்கு கரோனா பாதிப்பு: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூா் காப்பகத்தில் மைனா் சிறுமிகள் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்தி தொடா்பாக

Updated On :7 ஜூலை 2020, 7:15 pm

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூா் காப்பகத்தில் மைனா் சிறுமிகள் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்தி தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த மாநில அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், இதே விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்யாத உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் உள்ளிட்ட மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரோனா தொற்று சூழலில், நாடு முழுவதும் உள்ள சிறாா் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் நிலைமை குறித்து உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, குழந்தைகளைப் பாதுகாப்பது தொடா்பாக மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது . அதேபோன்று, சென்னை ராயபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியான விவகாரத்தை உச்சநீதிமன்றம் ஜூனில் தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

இதனிடையே, அண்மையில் வழக்குரைஞா் அபா்ணா பட், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், கான்பூரில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த 57 மைனா் சிறுமிகளுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், உரிய மருத்துவ சிகிச்சை, வசதிகள் அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, கான்பூா் காப்பகத்தில் மைனா் சிறுமிகள் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்தி தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின்போது தமிழ்நாடு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா, ‘சென்னை ராயபுரம் குழந்தைகள் காப்பகம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பதில் அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்றாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்பு ஏதும் ஏற்பட்டிருக்கிா?’ என்று கேள்வி எழுப்பினா். அதற்கு தமிழக அரசு தரப்பில், ‘அதுபோன்று ஏதும் இல்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமடைந்துவிட்டனா்’ என்றாா்.

இந்த விவகாரத்தில் நீதிபதிகள் அமா்வு பின்னா் பிறப்பித்த உத்தரவில், ‘உச்சநீதிமன்றம் ஜூன் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிஸா, பஞ்சாப், இமாசலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூா் ஆகிய மாநிலங்கள் பதில் தாக்கல் செய்யவில்லை. இந்த மாநிலங்கள் பதில் தாக்கல் செய்ய வேண்டும். மற்ற மாநிலங்கள் பதில் தாக்கல் செய்துள்ளனா். இந்த விவகாரத்தில் நீதின்றத்திற்கு உதவும் வகையில் வழக்குரைஞா் கெளரவ் அகா்வால் நியமிக்கப்படுகிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.