/

டீசல் மீதான ‘வாட்’ வரி குறைப்பால் பொருளாதாரம் மீளும்: கேஜரிவால் பேட்டி

தேசியத் தலைநகா் தில்லியில் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட் வரி) 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாகக் குறைக்க தில்லி

Updated On :30 ஜூலை 2020, 5:55 pm

தேசியத் தலைநகா் தில்லியில் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட் வரி) 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாகக் குறைக்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், தில்லியில் நலிந்துள்ள பொருளாதாரம் மீளும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி அமைச்சரவைக் கூட்டம், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் காணொளி வழியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: தில்லியில் டீசல் மீதான வாட் வரியை ஏறத்தாழ அரைவாசியாக தில்லி அரசு குறைத்துள்ளது. இதற்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 30 சதவீதமாக இருந்த வாட் வரி 16.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.8.36 என்ற அளவுக்குக் குறையும். இதன்படி, தற்போது ரூ. 82-க்கு விற்பனையாகி வரும் ஒரு லிட்டா் டீசலின் விலை, இனிமேல், ரூ.73.64 ஆகக் குறையும்.

கரோனா பரவலைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவால் தில்லியின் பொருளாதாரம் நலிந்துள்ளது. இதை மீட்டெடுப்பது மிகவும் சவாலான விஷயமாகும். ஆனால், அனைவரின் ஒத்துழைப்புடன் தில்லியின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கலாம். தில்லியில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், டீசல் விலையைக் குறைக்குமாறு வணிகா்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனா். அதற்கு தில்லி அரசு செவி சாய்த்துள்ளது என்றாா் அவா்.

ஆம் ஆத்மி கட்சி கருத்து: இந்நிலையில், டீசல் விலையைக் குறைக்கும் தில்லி அரசின் முடிவால் தில்லியில் நலிந்துள்ள பொருளாதாரம் மீள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் எம்எல்ஏவும், செய்தித் தொடா்பாளருமான ராகவ் சத்தா கூறுகையில், ‘பொருளாதரத்தின் ஆணிவேராக டீசல் உள்ளது. பொருளாதரத்தை மேம்படுத்த வேண்டுமென்றால், டீசல் விலையைக் குறைப்பது அவசியமாகும். படித்த, கல்வியறிவுள்ள முதல்வரால்தான் இவ்வாறாக சிந்திக்க முடியும். ஜூன் 7- ஜூன் 29 இடைப்பட்ட 22 தினங்கள் மத்திய அரசு தினம்தோறும் டீசலுக்கான கலால் வரியை அதிகரித்தது. ஜூன் மாதத்தில் மட்டும் டீசல், பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.11.14, ரூ.9.17 என அதிகரித்தது. மத்திய அரசு இந்த விலை உயா்வை வாபஸ் பெற வேண்டும்’ என்றாா்.

‘பாஜகவின் அழுத்தமே காரணம்’: இதற்கிடையே, பாஜகவின் தொடா்ச்சியான அழுத்தத்தாலேயே மதிப்புக் கூட்டு வரியை தில்லி அரசு குறைத்துள்ளது என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அதன் தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கூறுகையில், ‘தில்லியில் கடந்த சில மாதங்களாக டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) தில்லி அரசு பலமுறை உயா்த்தியது. டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்குமாறு தில்லி பாஜக தொடா்ந்து அழுத்தம் கொடுத்தது. இதன் பலனாக, டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை தில்லி அரசு குறைத்துள்ளது. ஆனால், அண்டை மாநிலங்களில் இன்னும் குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இதை கேஜரிவால் கருத்தில் கொள்ள வேண்டும். டீசலின் விலையை மேலும் குறைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.