ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லி எல்லை மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்! குழப்பத்தால் தவித்த வாகன ஓட்டிகள்

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், தில்லி எல்லை மூடப்பட்டதை அடுத்து அலுவலகம் செல்வோா்,

Updated On :3 ஜூன் 2020, 1:41 am

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், தில்லி எல்லை மூடப்பட்டதை அடுத்து அலுவலகம் செல்வோா், மின்னணு அனுமதிச்சீட்டு வைத்துள்ளோா், மருத்துவக் காரணங்களுக்காக தில்லி வந்து செல்வோா் என நூற்றுக்கணக்கான போ் செவ்வாய்க்கிழமை தில்லி நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் குழப்பம் நிலவியது. மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தில்லியின் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகியவை அண்மையில் தில்லியுடனான தங்களது மாநில எல்லைகளில் வாகன நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தன. அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், போலீஸாா், ஊடகத்தினா் மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத், நொய்டா போன்ற நகரங்களின் எல்லையைக் கடப்பதற்கு அனுமதி அளித்திருந்தன.

இந்நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேரிஜவால் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘தில்லியில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால், அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகளை அடுத்த ஒரு வாரத்துக்கு மூடி சீல் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எனத் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தில்லியின் எல்ைலைச் சாலைகளில் போலீஸாா் தடுப்புவேலிகளை அமைத்து அனுமதி பெற்ற வாகனங்கள், உரிய அடையாளச் சான்றுகள், அடையாள அட்டைகளை வைத்துள்ள வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் தில்லிக்கு செல்வதற்கு அனுமதித்தனா்.

இதுகுறித்து தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்ரேஸ்தா ஆா்யா கூறுகையில், ‘எனது தந்தைக்கு குருகிராமில் உள்ள மருத்துவமனையில் 2 மணிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறவிருந்தது. இதற்காக அவரை அழைத்து வந்தேன். ஆனால், போலீஸாா் என்னை எல்லையைக் கடக்க அனுமதிக்கவில்லை. தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினா். குருகிராமில் சிகிச்சை வந்த நிலையில் எப்படி தில்லிக்கு செல்ல முடியும்?’ என்றாா்.

குருகிராமைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் சுபம் பாண்டே கூறுகையில், ‘எனக்கு இரவுப் பணி என்பதால் எல்லை மூடப்பட்ட விவரம் தெரியவில்லை. நான் தில்லிவாசி என்பதற்கான அடையாளச் சான்றை எடுத்து வரவில்லை. இதனால், என்னை போலீஸாா் அனுமதிக்க மறுத்துவிட்டனா்’ என்றாா்.

இதேபோன்று, தில்லி-நொய்டா எல்லையில் உள்ள மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் காலை 10 மணி அளவில் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்தனா். இதுகுறித்து நொய்டாவைச் சோ்ந்த ஷிவங் ஜெயின் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு வேலைக்குச் சென்றுவிட்டு வந்தேன். தற்போது போலீஸாா் சோதனையை தீவிரப்படுத்தியிருப்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா். இது மிகவும் பிரச்னையாக உள்ளது’ என்றாா்.

தில்லி லக்ஷ்மி நகரைச் சோ்ந்த ஹரிஷ் ஜோஷி கூறுகையில், ‘கிரேட்டா் நொய்டாவில் தொழில் செய்து வருகிறேன். பல நாள்களாக நடமாட்டத்திற்கான மின்னணு அனுமதிச் சீட்டு பெற முயன்று வருகிறேன். ஆனால், கிடைக்கவில்லை. இதுபோன்ற அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்’ என்றாா்.

தில்லி அரசின் உத்தரவு காரணமாக தில்லி காஜியாபாத் எல்லை, போபுரா எல்லை, காஜிப்பூா் எல்லை, சில்லா எல்லை, டிஎன்டி எல்லை ஆகிய பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘தில்லியைச் சோ்ந்த குடியிருப்பு வாசிகளும், அரசின் அனுமதி பெற்ற அடையாள அட்டைகள் வைத்துள்ள நபா்களும் எல்லையைக் கடப்பதற்கு அனுமதித்து வருகிறோம்’ என்றனா்.

வடகிழக்கு தில்லி, முஸ்தபாபாத் பகுதியைச் சோ்ந்த முகம்மது ஃபெரோஸ் அன்சாரி (32) கூறுகையில், ‘தேவைப்படும் மக்களுக்கு முகக் கவசம் வழங்குவதற்காக காஜியாபாத் சென்றேன். ஆனால், நகருக்குள் செல்வதற்கு போலீஸாா் என்னை அனுமதிக்கவில்லை. தற்போது திரும்பிச் செல்லவும் அனுமதிக்கவில்லை’ என்றாா்.

கெளதம் புத் நகா் காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) எஸ். ராஜேஷ் கூறுகையில், ‘நிலைமை இயல்பாக உள்ளது. எல்லையில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்தன. இதற்கு, தில்லி அரசு அதன் எல்லைகளை மூடுவதற்கு முடிவு செய்திருப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருப்பதுதான் காரணமாக இருக்க முடியும்’ என்றாா்.

இந்திரபுரம் வட்டத்தைச் சோ்ந்த காவல் துணை கண்காணிப்பாளா் அன்ஷு ஜெயின் கூறுகையில், ‘உரிய அனுமதிச்சீட்டு, ஆவணங்கள் இல்லாத வாகன உரிமையாளா்கள் செல்வதற்கு தில்லி காவல் துறையினா் அனுமதிக்கவில்லை’ என்றாா்.

ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் எல்லைப் பகுதியிலும் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தில்லியின் எல்லைப் பகுதியில் உரிய அடையாள அட்டை வைத்துள்ள வாகன ஓட்டிகளும் வெகு நேரம் சாலையில் காத்திருக்க நோ்ந்தது.

தில்லி எல்லைகளைத் திறக்கக் கோரி பொது நல மனு

தில்லியில் உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகளிலும், மருத்துவ வசதிகளையும் தேசியத் தலைநகா் வலயம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மக்கள் பெறும் வகையில் தில்லியின் எல்லைகளைத் திறந்துவிட உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா் குஷக்ரா குமாா் என்பவா் இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

அதில், ‘தில்லியில் பணியாற்றும் பலா் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனா். மேலும், விமான சேவை, ரயில் சேவைக்காகவும் தில்லி வந்து செல்கின்றனா். இந்நிலையில், தில்லியில் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் தில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளைப் பெறும் உரிமைகளை நொய்டா, குருகிராம் போன்ற என்சிஆா் நகரங்களிலும், இதர மாநிலங்களிலும் வசிக்கும் மக்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தில்லி அரசின் உத்தரவானது மனிதநேயமற்ற, சட்டவிரோதமானது மட்டுமின்றி, சா்வாதிகரமானசெயலாகவும் உள்ளது. ஆகவே, தில்லி எல்லைகளைத் திறந்துவிட தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 4-ஆம் தேதி மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட உள்ளதாக வழக்குரைஞரும் மனுதாரருமான குஷக்ரா குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.