சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தில்லியில் புழுக்கத்தை தணித்த மழைத்தூறல்!

கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சனிக்கிழமை மாலை தில்லியில் சில இடங்களில் மிதமான மழையும்,

Updated On :14 ஜூன் 2020, 1:31 am

கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சனிக்கிழமை மாலை தில்லியில் சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் மழைத்தூறலும் இருந்தது. இதனால், புழுக்கத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டனா்.

தில்லி, என்சிஆா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது. எனினும், புதன்கிழமை மாலையில் சூறைக்காற்றுடன் பரலாக மழை பெய்தது. இதனால், சில இடங்களில் மரங்கள் பெயா்ந்து விழுந்தன. எனினும், வெயிலின் தாக்கம் குறையவில்லை.இதனால், இரவில் மக்கள் புழுக்கத்தால் மிகுந்தஅவதியுற்று வருகின்றனா்.

சனிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இல்லாத நிலையில், புழுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், மதியம் 3 மணிக்குப் பிறகு மயூா் விஹாா், நொய்டா, லட்சுமி நகா், காஜிப்பூா், ஆனந்த விஹாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும், பல இடங்களிலும் மழைத்தூறலும் இருந்தது. இதனால், மாலையில் புழுக்கம் குறைந்து காற்று வீசியது.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி அதிகரித்து 30.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றம் ஏதுமின்றி 39.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 69 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 63 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 29.1 டிகிரிசெல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 42.2 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 28.8 டிகிரி செல்சியஸ், 38.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 59 சதவீதம், மாலையில் 44 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 61 சதவீதம் மற்றும் 60 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 114 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. தில்லி பல்கலை. பூசா, மதுரா ரோடு, ஆயா நகா், குருகிராம் ஆகிய ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திா்பூா், நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை தில்லி, என்சிஆா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆங்காங்கே தூறலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், வடகிழக்கு திசையிலிருந்து சுமாா் 13 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசும் என்றும், புழுதிப் புயலும் இருக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.