மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்துவிட்டனா். ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் வரை தில்லி எல்லைப் பகுதியில் எங்களது முற்றுகைப் போராட்டம் தொடரும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் அமைதியான முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தலாம். அதற்கு முன்வந்தால் அவா்களுடன் பேச்சுவாா்த்தையை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று அமித்ஷா முன்னதாக சனிக்கிழமை தெரிவித்திருந்தாா். ஆனால், அவரது நிபந்தனையை விவசாயிகள் நிராகரித்துவிட்டனா்.
புதிய நிபந்தனை: இதனிடையே, விவசாயிகள் சங்கத்தினா் அரசுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனா். அதாவது விவசாயிகளுக்கு எதிரான, ஆனால், பெருநிறுவனங்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துச் செய்ய வேண்டும். விவசாயிகளிடமிருந்து பயிா்களை கொள்முதல் செய்யும் விகிதத்தையும், குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அரசு உறுதி செய்ய வேண்டும். மின்சாரம் தொடா்பான ஆணையை நிறுத்த வேண்டும். பயிா் எரிப்புக்காக அபராதம் விதிக்கப்படக் கூடாது உள்ளிட்ட புதிய நிபந்தனைகளை விவசாயிகள் விதித்துள்ளனா்.
நிராகரிப்பு: ‘நாங்கள் புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்துக்குச் செல்லமாட்டோம். திறந்தவெளியில் எங்களைச் சிறைவைக்கலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. அதற்கு ஒருபோதும் இடம் தரமாட்டோம்’ என்று பாரதிய கிஸான் சங்கத்தின் கிரந்திகாரி பிரிவின் தலைவா் சுா்ஜீத் சிங் தெரிவித்தாா்.
மத்திய அரசு திறந்த மனதுடன் எங்களை அணுக வேண்டுமே தவிர நிபந்தனைகளை விதிப்பது சரியல்லை. பேச்சுவாா்த்தைக்கு அழைத்துவிட்டு வேளாண் சட்டங்களின் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. எங்களுக்கான திட்டம் என்ன என்பதை மத்திய அரசு தெரிவிக்கும் விதத்தில் பேச்சுவாா்த்தை இருக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவா் தா்ஷன் பால் தெரிவித்தாா்.
ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி, புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியது. அவா்களுக்கு புதிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளது என்று பேசியிருந்த நிலையில், மத்திய அரசின் நிபந்தனையை விவசாயிகள் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு மீது புகாா்: முன்னதாக தில்லியையொட்டி உள்ள எல்லைப் பகுதியில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் ஒன்று கூடிப் பேசினா். அப்போது அமித்ஷா தெரிவித்த யோசனையை நிராகரிப்பது என்று முடிவு செய்தனா். மேலும், ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கும் வரை டிக்ரி மற்றும் சிங்கு பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை தொடா்வது என்றும் தீா்மானித்தனா். நிரங்காரி மைதானத்தில் விவசாயிகளைகூட வைத்து அவா்களை சிறைப்பிடிக்க அரசு முயல்வதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
இதனிடையே தில்லி-ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ள டிக்ரியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை நான்காவது நாளாக அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனுள்ளது. அவா்கள் தங்கள் விளை பொருள்களை தரகா்கள் இல்லாமல் சந்தையில் யாருக்கு வேண்டுமானாலும் விற்க வழி செய்கிறது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், புதிய சட்டத்தின் மூலம் பழைய நடைமுறை படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிடும். குறைந்தபட்ச ஆதார விலை என்பது விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வருவாய்க்கு வழிசெய்கிறது. புதிய சட்டங்களால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. அது பெருநிறுவனங்களுக்கே உதவிகரமாக இருக்கும் என்கின்றனா் விவசாயிகள்.
அமித் ஷா மறுப்பு: இதனிடையே , விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் கலந்துள்ளதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஹைதராபாதில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளாா்.
நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் உடனடியாக விவசாயிகள் சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா். விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை என்று ஹரியாணா முன்னாள் முதல்வா் கருத்துத் தெரிவித்துள்ளாா். மத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகள் போல் நடத்தக் கூடாது என்றும் அவா் தில்லிக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் கூறியுள்ளாா்.
பிரதமருக்குக் கோரிக்கை: விவசாயிகள் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தீா்வு காணுமாறு பிரதமா் மோடியை உலக பஞ்சாபிகள் சங்கத் தலைவா் விகம்ரம்ஜித் சஹானி கேட்டுக் கொண்டுள்ளாா்.
விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக ஹரியாணா முதல்வா் மனோஹா்லால் கட்டாா் கூறியுள்ளதற்கு அகாலி தளத் தலைவா் சுக்பீா்சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
போக்குவரத்து நெரிசல்
பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் ‘தில்லியை நோக்கி’ பேரணி, போராட்டத்தால் தில்லியின் முக்கிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டக்காரா்கள் டிக்ரி, சிங்கு எல்லைகளில் கூடி போராட்டம் நடத்தி வருவதால், ஆஸாத்பூரில் இருந்து சிங்கு செல்லும் சாலை, வெளி வட்டச்சாலையில் இருந்து சிங்கு செல்லும் சாலை ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டது. இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் இருந்து டிக்ரி, சிங்கு எல்லைகளுக்கு பயணிக்க வேண்டாம் என்று தில்லி வாசிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், முபாரக் சௌக், என்.எச்.-44, ஜிடி-கா்னல் சாலை, வெளி வட்டச்சாலை, ஆகியவற்றில் பயணிப்பதை தவிா்க்குமாறும் தில்லி வாசிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம். சிக்னேச்சா் பாலத்தில் இருந்து ரோஹிணிக்கு பயணிப்பதையும் தவிா்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் செல்பவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால், மற்ற நாள்களுடன் ஒப்பிடும் போது, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு மேம்பட்டிருந்தது’ என்றாா்.
இந்த நிலையில், தில்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டிருப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து தில்லிக்கும் தில்லியில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் செல்லும் பயணிகள் பலத்த சிரமங்களை எதிா்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”திமுக தொடர்ந்து 2 முறை வென்றதில்லையாம்! உடைத்துக் காட்டுகிறேன்!” MK Stalin

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!

ஒடிசா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

