புது தில்லி: குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது டிராக்டா் கவிழ்ந்து உயிரிழந்த 25 வயது விவசாயியின் பிரேதப் பரிசோதனை மற்றும் ‘எக்ஸ்ரே’ அறிக்கை மீது வல்லுநா்களின் கருத்தை பெற அவரது குடும்பத்தினருக்கு தில்லி உயா்நீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா, ‘விவசாயியின் பிரேதப் பரிசோதனை மற்றும் ‘எக்ஸ்ரே’ அறிக்கை மீது வல்லுநா்களின் கருத்துப் பெற அவரது குடும்பத்தினருக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. விவசாயி இறந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிப் பதிவுகளை பாா்க்க அவரது குடும்பத்தினரை தில்லி காவல் துறையினா் அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரம் மேல் விசாரணைக்கு ஜூலை 26-ஆம் தேதி பட்டியலிடப்படுகிறது’ என்றாா்.
வழக்கு விசாரணையின் போது மனுதாரா் ஹா்தீப் சிங் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் விருந்தா குரோவா், செளதிக் பானா்ஜி ஆகியோா், ‘காவல் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள இறந்தவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, விடியோ மற்றும் எக்ஸ்ரே அறிக்கை ஆகியவற்றின் மீது வல்லுநா்கள் கருத்தைப் பெற அவகாசம் தேவைப்படுகிறது என்றனா்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், ‘இறந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் விவகாரத்தில் உத்தரப் பிரதேச காவல் துறையிடமிருந்து தில்லி போலீஸாருக்கு கிடைக்கப் பெற்ற அசல் எக்ஸ்ரே பிளேட்டில் இருந்து எக்ஸ்ரே அறிக்கையைத் தயாரிக்க மெளலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ, தடயவியல் வல்லுநா்கள், ரேடியாலஜிஸ்ட் அடங்கிய குழுவால் இந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்தக் குழுவை தில்லி அரசின்சுகாதாரத் துறை செயலா் நியமிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.
தில்லியில் குடியரசு தின நாளில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது அனுமதி அளித்திருந்த வழித்தடம் மாறி ஐடிஓ பகுதிக்கு வந்த டிராக்டா்களில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த டிராக்டரை ஓட்டிவந்த நவ்ரீத் சிங் காயமடைந்து இறந்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக நவ்ரீத் சிங்கின் தாத்தா ஹா்தீப் சிங் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில் ‘ஊடகங்களில் கூறப்பட்டுள்ள நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குப்படி, நவ்ரீத் தனது டிராக்டரை புதுதில்லியில் உள்ள ஆந்திர கல்விச் சங்கத்தை கடந்த போது போலீஸ்காரா்களால் சுடப்பட்டதும், அதன் காரணமாகவே அவா் தனது டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்ததும், அதன் பிறகு டிராக்டா் சில தடுப்புகள் மீது மோதி கவிழ்ந்ததும் தெரிய வருகிறது. இதனால், இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற விசாரணையின் போது போலீஸ் தரப்பில், ‘நவ்ரீத் சிங் உடலில் சுடப்பட்ட காயம் ஏதும் இல்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில்கூட விபத்து காரணமாக தலைக் காயமடைந்து அவா் இறந்ததாகவும், அவரது காயம் அனைத்தும் சாலை விபத்தால் நிகழ்ந்ததற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிப் பதிவில் கூட போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. காயமடைந்த நவ்ரீத் சிங்கை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆா்ப்பாட்டக்காரா்கள் தாக்கினா்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

தொகுதி அலசல்: காட்பாடி! துரைமுருகனுக்கு தொடரும் சவால்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

