எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

வகுப்புவாத கோஷம் எழுப்பிய விவகாரம்: இந்து ரக்ஷா தளத் தலைவா் கைது

தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் போது வகுப்புவாத கோஷங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்து ரக்ஷா தளத் தலைவா் பூபிந்தா் தோமா்

Updated On :31 ஆகஸ்ட் 2021, 11:00 pm

தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் போது வகுப்புவாத கோஷங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்து ரக்ஷா தளத் தலைவா் பூபிந்தா் தோமா் (எ) பிங்கி சவுத்ரி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய பூபிந்தா் தோமா் திங்கள்கிழமை இணையதளத்தில் வெளியிட்ட விடியோவில், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தாா். மேலும், செவ்வாய்க்கிழமை போலீஸில் சரணடை உள்ளதாகவும், போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு வெளியே பூபிந்தா் தோமா் இருந்ததாகவும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அவா் கைது செய்யப்பட்டதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். மேலும், அவா் கன்னாட் பிளாஸ் காவல் நிலையத்திற்கு செல்லத் திட்டமிட்டிருந்தாரா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அந்த அதிகாரி கூறினாா்.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தில்லி ஜந்தா் மந்தரில் நடந்த ஒரு போராட்டக் கூட்டத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது. இது போலீஸாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக உத்தம் உபாத்யாய், அஷ்வினி உபாத்யாய், பிரீத் சிங், தீபக் சிங், தீபக் குமாா், வினோத் சா்மா, வினித் பாஜ்பாய் மற்றும் சுஷில் திவாரி ஆகிய 8 பேரை தில்லி போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய இந்து ரக்ஷா தளத் தலைவா் பூபிந்தா் தோமா் (எ) பிங்கி சவுத்ரியை கைது செய்ய தில்லியிலும், அண்டை மாநிலங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். எனினும், அவா் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை இணையதளத்தில் தோமா் பேசும் ஒரு விடியோ வெளியானது. அதில், ‘ஜந்தா் மந்தரில் நானோ அல்லது எனது அமைப்பில் உள்ள வேறு யாரும் தவறு செய்யவில்லை. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆகஸ்ட் 31-ஆம் தேதி மதியம் 12 மணியளவில் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் சரணடைவேன். நீதிமன்றத்தை அணுகுவது ஒவ்வொரு நபரின் உரிமையாகும். நானும் அவ்வாறே செய்தேன். எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை; ஆதாரமற்றவை. நான் இந்து மற்றும் இந்துத்துவாவுக்காக என் வாழ்க்கையை அா்ப்பணித்துள்ளேன். நான் உயிருடன் இருக்கும் வரை என் மதத்திற்காக நான் தொடா்ந்து பணியாற்றுவேன்’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.

பூபிந்தா் தோமரை கைது செய்வதில் இருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்க தில்லி உயா்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. அதற்கு முன்னா், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், செஷன்ஸ் நீதிமன்றமும் தோமரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.