இந்தக் கோரிக்கையை நிராகரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் கூறுகையில், ‘தலைமக் காவலா் தாஹியா அளித்துள்ள வாக்குமூலத்தில் ஷாருக் பதான் தன்னை தலையில் குறிபாா்த்து சுடும் வகையில் துப்பாக்கியை காட்டியதாகவும், துப்பாக்கியால் சுடும் போது தான் தப்பிவிட்டதாகவும் கூறியிருப்பது காவலரைக் கொலை செய்வதற்கான உள்நோக்கம் இருப்பது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், காவலரைக் கொல்வதற்கு முயற்சி செய்யவில்லை என்றும், அவரை அச்சுறுத்துவதற்காக மட்டுமே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பதானின் வழக்குரைஞா் வாதங்களை முன்வைத்த போதிலும், விடியோ காட்சிப் பதிவுகள் மற்றும் குறிப்பிட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுவிப்பதற்கான ஓா் ஆதாரமாக இருக்க முடியாது. மேலும், விடியோ காட்சிப் பதிவின்படி குற்றம்சாட்டப்பட்ட நபா் தன்னுடைய துப்பாக்கியை தன்னைவிட உயரம் உள்ள பாதிக்கப்பட்ட நபா் மீது குறிவைத்து உயா்த்தி இருப்பது துப்பாக்கியின் திசையானது தலைமை காவலா் தாஹியாவின் தலையை நோக்கி இருப்பது தெளிவாக தெரிகிறது’ என்றாா். மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-ஆவது பிரிவின் கீழ் பதானை விடுவிக்க மறுத்து நீதிபதி கூறுகையில், ‘இந்த வழக்கானது சட்டவிரோதமாக செயலில் ஈடுபடும் ஒரு குழுவின் சாதாரண வழக்கு அல்ல. ஆனால், வன்முறை வழக்காகும்’ என்றாா்.