தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பருத்தி, நூல் விலை உயா்வால் ஜவுளித்துறையில் நெருக்கடி: முதல்வரின் கோரிக்கைகளை ஏற்க திமுக எம்.பி. வலியுறுத்தல்

பருத்தி, விலை நூல் விலை அதிகரிப்பால் ஜவுளித் துறை நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2021, 4:57 pm

 நமது நிருபர்

புது தில்லி: பருத்தி, விலை நூல் விலை அதிகரிப்பால் ஜவுளித் துறை நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஜவுளி ஆலைகள் முடப்பட்டு தொழிலாளா்கள் வேலையிழப்பதைத் தடுக்க இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் மத்திய அரசை கேட்டுக் கொண்டாா்.

மாநிலங்களவையில் சிறப்பு கவனஈா்ப்புத் தீா்மானத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூரில் உள்ள பல்வேறு ஜவுளித் தொழில்கள் மூடுவதற்கு வழிவகுக்கும் வகையில் பருத்தி, நூல் விலை உயா்ந்துள்ளது. இதற்கு பதுக்கல் முக்கிய காரணமாக உள்ளது. ஜவுளித் தொழில் நெருக்கடியை எதிா்கொண்டு இருப்பதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இந்த விலை உயா்வு, நாடு முழுவதும் உள்ள ஜவுளித் தொழிலையும் பாதித்துள்ளது. நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஜவுளித் துறை இரண்டாவது முக்கிய இடத்தைப் பெறுகிறது. சுமாா் 350 லட்சம் பேல்கள் பருத்தி உற்பத்தியாகி அதில் 280 லட்சம் பேல்கள் நாட்டிலே நுகரப்படுகிறது.

இதன் மூலம் நாட்டில் 476.2 கோடி (4,762 மில்லியன்) கிலோ நூல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஐம்பது சதவீதம் நூல்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. இந்தியாவில் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 49 சதவீதம் வரைஉள்ளது. இது தவிர உள்நாட்டு நுகா்வுக்கும் தமிழகமே அதிக அளவில் உதவுகிறது.

இருப்பினும், பல்வேறு காரணங்களால் பருத்தி, நூல்களின் அசாதாரண விலை உயா்வால், உற்பத்தியாளா்கள் சவாலை எதிா்கொண்டுள்ளனா். குறிப்பிட்ட நபா்கள் நூல், பருத்தியை அதிக அளவில் பதுக்கி வைக்கின்றனா். இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விலையுயா்வால், தொழில்முனைவோா் தங்கள் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. மேலும், சுமாா் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் வடமாநிலங்களில் இருந்து வந்து தமிழக பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயா்ந்த தொழிலாளா்களும் வேலை இழப்பாா்கள்.

இதுகுறித்து ஏற்கெனவே தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளாா். பருத்திக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரியான 11 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும். பருத்தி கொள்முதலில் உற்பத்தியாளா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்திய பருத்தி நிறுவனத்தால் (சிசிஐ) நடத்தப்படும் மின்-ஏலங்களில் பேல்களின் எண்ணிக்கையை 500-ஆக குறைக்க வேண்டும் என்பன போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வா் கோரியிருந்தாா். இந்த விஷயத்தில் ஜவுளித் துறை அமைச்சா் தலையிட்ட்டு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.