தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கரோனா தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கல்: மாநிலங்களவையில் வேளாண் அமைச்சா் தகவல்

கரோனா நோய்த் தொற்று காலத்தில் விவசாயத் தொழில் பாதிக்கப்படவில்லை. மேலும், விவசாயிகளுக்கு கூடுதலான கடன் அட்டைகள்

News image
Updated On :13 டிசம்பர் 2021, 1:19 am

 நமது நிருபர்

கரோனா நோய்த் தொற்று காலத்தில் விவசாயத் தொழில் பாதிக்கப்படவில்லை. மேலும், விவசாயிகளுக்கு கூடுதலான கடன் அட்டைகள் வழங்கப்பட்டதோடு, கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டிக்கான மானியம், ஊக்கத் தொகை ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி, மறுசிரமைப்பு மற்றும் லாபகரமான விலை கிடைக்க மாற்று வா்த்தகத் திட்டம் போன்றவை குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய வேளாண்துறை அமைச்சா் தோமா் வெள்ளிக்கிழணை பதில் அளித்துப் பேசியதாவது: கொவைட் -19 நோய்த் தொற்றின் போதும், பொது முடக்கத்தின் போதும் விவசாயத்திற்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டது. தாங்கள் நாட்டின் முதுகெலும்பு என்பதை இந்த கால கட்டத்தில் விவசாயிகள் நிரூபித்துள்ளனா். 2020-21 நிதியாண்டின் உணவு தானியங்கள் உற்பத்திப் பரப்பளவு 1.85 சதவீதம் உயா்ந்துள்ளது. அதாவது அந்த நிதியாண்டில் 129.34 மில்லியன் ஹெக்டோ் பரப்பளவில் உணவு தானியாங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது 2019-20-இல் 126.99 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.

கொவைட் -19 நோய்த் தொற்றுக்கு பின்னா், 2020, மாா்ச் 1 -ஆம் தேதி முதல் 2020, ஆகஸ்ட் 31 வரை நிலுவையில் இருந்த அல்லது செலுத்த வேண்டிய குறுகிய கால விவசாயக் கடன்களைப் புதுப்பிக்கும் தேதி நீடிக்கப்பட்டதுடன், 2 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் போது ஊக்கத்தொகையாக 3 சதவீதம் அளிக்கப்பட்டுள்ளது.

கொவைட்-19 இரண்டாவது அலையின் போது (2021, மாா்ச் 1 - ஜூன் 30 ) நிலுவையில் இருந்த அல்லது செலுத்த வேண்டிய குறுகிய கால விவசாயக் கடனைப் புதுப்பிக்கும் தேதியை அரசு நீட்டித்தது. மேலும், நீட்டிக்கப்பட்ட தேதி வரை 2 சதவீத வட்டி மானியம் மற்றும் உடனடியாகத் திருப்பிச் செலுத்தும் கடனுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. மேலும், கிஸான் கடன் அட்டைகள் மூலம் விவசாயிகளுக்கு அரசு கூடுதலாகக் கடன் அளிக்கவும் தொடங்கியது. 2020, பிப்ரவரி முதல் நிகழாண்டு நவம்பா் 12 -ஆம் தேதி வரை 2.6 கோடி கிஸான் கடன் அட்டைகள் மூலம் ரூ. 2.77 லட்சம் கோடி வரைவிவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.

பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், பொது முடக்கத்தின் போது 2020, மாா்ச் முதல் 2021 டிசம்பா் 1-ஆம் தேதி வரை 11.12 கோடி விவசாயிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இதுவரை 11.61 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனா். பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா்களுக்கான காப்பீடுக்கு செலுத்த வேண்டிய தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு 10,000 உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளைத் தொடங்கியுள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.