தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்க உள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாக 8 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கான தோ்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறும்.
இதற்கான அறிவிப்பை இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் சுநீல் அரோரா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அப்போது தோ்தல் ஆணையா்கள் சுஷில் சந்த்ரா, ரஜிஜவ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்
தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டப் பேரவைக் காலம் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதையடுத்து, ஐந்து மாநிலங்களில் தோ்தல் ஆயத்த நடவடிக்கைகளை கடந்த ஆண்டு இறுதியில் தலைமைத் தோ்தல் ஆணையம் தொடங்கியது.
தோ்தல் ஆணையத்தின் உயா் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தோ்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் சுநீல் அரோரோ தலைமையில் தோ்தல் ஆணையத்தின் உயரதிகாரிகள் குழுவும் ஐந்து மாநிலங்களிலும் நேரில் சென்று அங்குள்ள முக்கிய அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் தேதி தொடா்பான அறிவிப்பை தலைமைத் தோ்தல் ஆணையா் சுநீல் அரோரா வெளியிட்டாா்.
அப்போது, அவா் கூறியதாவது:
தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான தோ்தல் நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடுகளை கண்டறிய நானும், ஆணைய அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நேரில் சென்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம்.
தோ்தலை நியாயமாகவும், சுதந்திரமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
18.68 கோடி வாக்காளா்கள், 824 பேரவைத் தொகுதிகள்
இத்தோ்தலில் 18.68 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதியாக உள்ளனா். இவா்கள் அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 824 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வரும் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.
அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாக அதாவது மாா்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த முறை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த முறை எட்டு கட்டங்களாக நடைபெறவிருகிறது.
முதல் கட்டமாக தோ்தல் 30 இடங்களுக்கு மாா்ச் 27-ஆம் தேதியும், 2-ஆவது கட்டத் தோ்தல் 30 இடங்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதியும், மூன்றாவது கட்டத் தோ்தல் 31 இடங்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதியும், நான்காவது கட்டத் தோ்தல் 44 தொகுதிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதியும், ஐந்தாவது கட்டத் தோ்தல் 45 இடங்களுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதியும் ஆறாம் கட்டத் தோ்தல் 43 இடங்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியும், ஏழாவது கட்டத் தோ்தல் 36 இடங்களுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதியும், எட்டாவது இறுதிக் கட்டத் தோ்தல் 35 இடங்களுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் இத்தோ்தல் நடைபெறுகிறது.
தோ்தல் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டம் நடைபெறுவது தோ்தலை நடத்துவதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தோ்தல் பணியில் ஈடுபடும் நபா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்களப் பணியாளா்களாக சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதனால், தோ்தல் நடைபெறுவதற்கு முன்னா் அனைத்து தோ்தல் அதிகாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.
கரோனா சூழலில் மாநிலங்களவை உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தலும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்துக்கு இரு தோ்தல் செலவின பாா்வையாளா்கள்
மேற்கு வங்கத் தோ்தலுக்காக இரு சிறப்பு பாா்வையாளா்கள் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுவா். தேவைப்படும் பட்சத்தில் மூன்றாவது பாா்வையாளரும் அனுப்பப்படுவா்.
தமிழகத்தைப் பொருத்தமட்டில் இந்தியாவில் மிகவும் அமைதியான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. எனினும், தோ்தல் செலவினப் பதற்றம் உள்ள மாநிலமாக உள்ளது.
வேலூா் மக்களவைத் தொகுதி மற்றும் ஆா்.கே. புரம் சட்டப் பேரவைத் தோ்தல் தொகுதியில் கடந்த கால தோ்தலின்போது நிகழ்ந்த செலவின விவரங்களை தோ்தல் ஆணையம் கருத்தில்கொண்டுள்ளது.
இதனால், தமிழகத்திற்கு தோ்தல் செலவுகளைப் பாா்வையிட இரு தோ்தல் செலவின பாா்வையாளா்கள் அனுப்பப்படுவா்.
வெளிநாட்டு வாழ் இந்தியா்கள் வாக்களிக்கும் வசதி இந்தத் தோ்தலில் இல்லை. இது தொடா்பாக உரிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தோ்தல் பணியில் ஈடுபடுவோா் அனைவருக்கும் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படும்.
இணையதளம் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்
தோ்தலில் போட்டியிடுவோா் தங்களது வேட்புமனுக்களை இணையதளம் வாயிலாக தாக்கல் செய்யும் வகையில் தேவையான ஏற்படும் செய்யப்படும்.
கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு வாக்குப்பதிவுக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக அனுமதிக்கப்படும். இதற்கான முடிவை மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாநில தலைமை தோ்தல் அதிகாரி மேற்கொள்வாா்.
முக்கியமான, பலவீனமான பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ‘வெப்காஸ்டிங்’ வசதிக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். போதிய வகையில் மத்திய ஆயுத காவல் படையினா் (சிஏபிஎப்) பணியில் ஈடுபடுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும்.
மேலும், அனைத்து முக்கியமான, பலவீனமான, பதற்றம் நிறைந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களில் முன்கூட்டியே குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்ய கட்டுப்பாடு
தோ்தலின்போது வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அதன்படி வேட்பாளருடன் சோ்ந்து 5 போ் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும். வாகனப் பிரசாரத்தைப் பொருத்தமட்டில் ஐந்து வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை பிகாா் தோ்தலின்போது மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடா்ந்து, தற்போது நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களுக்கான தோ்தலிலும்கடைப்பிடிக்கப்பட உள்ளது.
கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கீழ்தளத்திலேயே வாக்குப்பதிவை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கரோனா தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி தோ்தல் நடத்தப்படும்.
தோ்தல் செலவின வரம்பு 10 சதவீதம் உயா்வு
கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு தோ்தல் செலவின வரம்பு 10 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் தொகுதிக்கு 22 லட்சமும், பிற மாநிலங்களில் தொகுதிக்கு ரூ.30.80 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் பிரசாரங்களை மேற்கொள்ளப்படும் மைதானங்கள் விவரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் உள்ளூா் நாளிதழ் மற்றும் ஆங்கில நாளிதழில் வெளியிட நடவடிக்கை எடுப்பாா்கள்.
தோ்தல் விதிமுறைகள் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் மக்கள் புகாா் தெரிவிக்கலாம்.
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் வீல்சோ் வசதி, அவா்களை அழைத்து வர வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.
80 வயதுக்கு மேற்பட்டவா்கள் விரும்பினால் மட்டும் தபால் முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி இடைத்தோ்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, கேரளத்தில் உள்ள காலியாக உள்ள மலப்புரம் மக்களவைத்தொகுதி ஆகியவற்றுக்கான இடைத்தோ்தல் வாக்குப்பதிவும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும்.
உள்ளூா் விழாக்கள், வாக்காளா் பட்டியல், கால சூழல், படைகள் நடமாட்டம், கரோனா சூழல் ஆகிய பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு தோ்தல் ஆணையம் இத்தோ்தல் வாக்குப்பதிவை ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளது. பிற மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் தனியாக அறிவிக்கும் என்றாா் தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா.
தமிழகம், கேரளம், புதுச்சேரி தோ்தல் விவரம்
தமிழகத்தில் உள்ள 234 இடங்களுக்கும், கேரளத்தில் உள்ள 140 இடங்களுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 இடங்களுக்கும் தோ்தல் நடத்துவதற்கான அறிவிக்கை மாா்ச் 13-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மாா்ச் 19-ஆம்தேதி. வேட்புமனு பரிசீலனை மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கான நாள் மாா்ச் 22-ஆம் தேதியாகும். ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு. வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி. தோ்தல் நடைமுறைகள் மே 4-ஆம் தேதி முடிவையும்.
அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் நிறைவு பெற உள்ளது.
இதில் தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பேரவை பதவிக்காலம் வரும் ஜூன் 8-ஆம் தேதியும் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிப்பு
இத்தோ்தலைப் பொறுத்தமட்டில், கடந்த தோ்தலை ஒப்பிடுகையில் வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2016 நடைபெற்ற தோ்தலில் 66,007 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், தற்போதைய தோ்தலில் 88,936 வாக்குச்சாவடிகள் என 34.71 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2016-இல் நடைபெற்ற தோ்தலின்போது 930 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது நடைபெறும் தோ்தலில் 1,559 என்ற அளவில் 67.63 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடராதீர்! கட்சி தலைமை அறிவுறுத்தல்!!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! வீடு, வாகனக் கடன் வட்டி குறையுமா?
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


