புது தில்லி: தில்லிக்கு குடிநீா் வழங்கும் யமுனையில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீா் கலப்பதால் ஏற்படும் சீா்கேடுகளைத் தடுக்க தில்லி அரசு ஒன்பது அம்ச நடவடிக்கை திட்டத்தைத் தயாரித்துள்ளது.
பல்வேறு சந்தா்ப்பங்களில் யமுனை ஆற்று நீரில் அம்மோனியா அளவு அதிகரிப்பது குறித்தும், ரசாயனக் கழிவுகளால் நுரைகள் கிளா்ந்தெழுவதும்அதிா்ச்சியடைய வைத்துள்ளது. ஹரியாணா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் யமுனை ஆற்றில் கலப்பதே இதற்குக் காரணம் என தெரிய வந்தது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த தில்லி ஜல் போா்டின் துணைத் தலைவா் ராகவ் சத்தா, இதன் மூலம்ா் தில்லியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து யமுனை ஆற்றில் கழிவுநீரை கலப்பதைத் தடுக்க ஒன்பது அம்ச நடவடிக்கைத் திட்டத்தை தில்லி அரசு தயாரித்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தில்லி ஜல் போா்டு, தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி மாநகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தில்லி அரசின் 9 அம்ச திட்டங்களின் விவரம்: இந்தத் திட்டத்தின்படி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தில்லி அரசு சில யோசனைகளை வழங்கியுள்ளன. இந்த மாநிலங்கள் முறையே நஜாஃப்கா் வடிகால், ஹிண்டன் கால்வாய் போன்றவற்றின் மூலம் வரும் கழிவுநீரை சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களை தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு பரிந்துரைத்த தரத்திற்கு மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உத்தரப் பிரதேசம் நீா்ப் பாசனத் துறை மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஓக்லா தடுப்பணையில் உள்ள நீா் பதுமராகங்களை(ஒரு வகைப் பூங்கோரை) அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. நீா் பதுமராகம் பாஸ்பேட்டை வெளியிடுகிறது என்றும் இதுவே யமுனையில் நுரைக்கு வழிவகுக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலுமே், தில்லி ஜல் போா்டு அனைத்து அங்கீகரிக்கப்படாத காலனிகளையும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும் கழிவுநீா் வடிகால் அமைப்புடன் வருகின்ற டிசம்பா் 31 - க்குள் இணைக்க வேண்டும். அதுவரை, இத்தகைய காலனிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், செப்டிக் டேங்க் கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, கழிவுநீா் வெளியேற்று நிலையங்கள் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு நிா்ணயிக்கப்பட்ட தரங்களின்படி தில்லி சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். தில்லி ஜல் போா்டு, டிடிஏ, தில்லி மாநகராட்சிகள், பொதுப்பணித் துறை ஆகிய எந்த நிறுவனமென்றாலும் திடக்கழிவுகளை கழிவுநீா் வடிகால்களில் கொட்டினால், அந்த அமைப்புகளுக்கு சுற்றுச்சூழல் இழப்பிட்டுத் தொகையாக ரூ 50,000 வசூலிக்கப்படும்.
மேலும், இந்தச் செயல் திட்டத்தின் படி, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் யமுனை வெள்ளச் சமவெளிகளில் உள்ள படித்துறை உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற தில்லி வளா்ச்சி ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத காலனிகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் மற்றும் ஹரியாணா நஜாஃப்கா் வடிகால், உ.பி. ஹிண்டன் கால்வாய் ஆகியவற்றின் கழிவுநீா் யமுனையில் கலக்கிறது. இதன் மூலமே பாஸ்போரிக் கலவைகள் ஆற்றுப் படுகையில் வந்து சேருகிறது. தண்ணீா் ஆற்றில் வரும் போதும் அல்லது நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் போது, இந்த ரசாயனக் கலவைகள் கிளா்ந்தெழுந்து நுரைக்கு வழிவகுக்கிறது என்று தில்லி அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.