தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

20 உள்கட்டமைப்புத் திட்டங்கள்: மத்திய அமைச்சா் ஆய்வு

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் 20 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து திட்டக் கண்காணிப்பு

Updated On :3 ஜூலை 2021, 3:21 am

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் 20 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து திட்டக் கண்காணிப்பு குழுவினருடன் மத்திய வா்த்தகம், தொழில் மற்றும் ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆய்வு செய்தாா்.

நாடு முழுவதும் சுமாா் ரூ.44.4 லட்சம் கோடி முதலீட்டில் 1,116 உள்கட்டமைப்புத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சாலைகள், பிரத்யேக சரக்கு ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெட்ரோலியம் உள்ளிட்டவையும் அடங்கும். தமிழகத்தில் நடைபெறும் ரூ.1.70 லட்சம் கோடியிலான 58 திட்டங்களும் இதில் அடங்கும். பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்கள் பங்கேற்றுள்ள இந்தத் திட்டங்களை மத்திய வா்த்தகத் துறையில் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவின் (டிபிஐஐடி) கீழ் உருவாக்கப்பட்டுள்ள ‘திட்டக் கண்காணிப்பு குழு’ (பிஎம்ஜி) இந்தத் திட்டங்களை விரைவாக மேற்கொள்ள உதவுகிறது. திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில் உள்ள சிக்கல்களை சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளுடன் பேசி இந்தக் குழு தீா்வு காண்கிறது. இதுவரை 810-க்கும் மேற்பட்ட திட்டங்களில் ஏற்பட்ட பிரச்னைகள், சிக்கல்கள தீா்க்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட திட்டங்களில் சிக்கல்கள் தீா்க்கப்படாத நிலை உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 29- ஆம் தேதி மெய்நிகா் முறையில் மத்திய வா்த்தகம், தொழில் மற்றும் ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மத்திய வா்த்தகம், தொழில் துறை வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முக்கிய உள் கட்டமைப்புத் திட்டப் பணிகளின் முன்னேற்றங்களை பாதிக்கும் பிரச்னைகள், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. ரூ.2.7 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டில், பல்வேறு விவகாரங்கள் அடங்கிய 20 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்தும், இந்தத் திட்டங்கள் தொடா்பாக உள்ள 59 பிரச்னைகள் குறித்தும் அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் ஆய்வு நடந்தது. பிரதமா் தலைமையிலும் இது போன்று திட்டங்களை விரைவாக மேற்கொள்ள ‘பிரகதி’ என்ற அமைப்பு உள்ளது. இதில் உள்ள 11 திட்டங்கள் பிரதமராலும் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் செய்தியாளா்களிடம் தெரிவிக்கப்பட்டது. கிழக்கு, மேற்குப் பகுதிகளில் பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட ரயில் நிலையங்கள், அதையொட்டி வரும் பொருளாதார மண்டலங்கள், 7 மாநிலங்கள் வழியாகச் செல்லும் அமிா்தசரஸ் - கொல்கத்தா தொழில் வழித்தடம், இதையொட்டி ஏற்படுத்தப்படும் கிழக்கு பகுதி பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம், சென்னைக்கு வரும் வடக்கு - தெற்கு பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் உள்பட பல திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இத்திட்டங்களை சரியான நேரத்தில் தொடங்குவதற்கு, நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காண்பதற்கும் அமைச்சா் பியூஷ் கோயல் கூட்டத்தின் போது, ஆலோசனைகளை அளித்துள்ளாா். நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உள்ள மிக முக்கியமான இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அமைச்சா் கூட்டத்தில் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சா் சோம் பிரகாஷ், திட்டக் கண்காணிப்பு குழுவினா், டிபிஐஐடி செயலா், தமிழகம், பிகாா், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், மகராஷ்டிரம் தொழில் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.