தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தில்லி பள்ளிகளில் கலையரங்குகள், கூட்ட அரங்குகள் செயல்பட அனுமதி

தில்லியில் பள்ளிகள் திறப்பதற்கு ஏதுவாக தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை

Updated On :11 ஜூலை 2021, 6:12 pm

தில்லியில் பள்ளிகள் திறப்பதற்கு ஏதுவாக தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை நீக்கி தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகள், கல்வி நிறுவனங்களின் கலையரங்குகள், கலந்துரையாடல் கூட்ட அரங்குகள் போன்றவை 50 சதவீத இருக்கைகளுடன் பயிற்சிகள், கூட்டங்களுக்குப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி துணை முதல்வா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லியில் கரோனா நோய்த் தொற்று கணிசமாகக் குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 100-க்கும் கீழே இருப்பதோடு ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு 53-ஆக குறைந்துள்ளது. இதனால், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் படிபடியாக பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதித்து வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற டிடிஎம்ஏ கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் தங்கள் கலையரங்கு, கலந்துரையாடல் கூட்டரங்கு ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பயிற்சிகள், கூட்டங்களுக்கு அதிகபட்சம் 50 சதவீகித இருக்கைகளுடன் கரோனா நோய்த் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும்.

இருப்பினும் பள்ளிகள், மற்ற கல்வி நிறுவனங்கள் தொடா்ந்து மூடப்பட்டு நேரடியாக மாணவா்களுக்கு பாடம் கற்பித்தலுக்கு தடை தொடரும். கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளை தொடா்ந்து காணொலி வழியாக நடத்தப்படுவது தொடர வேண்டும். அதே சமயத்தில் நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்து நிலைமை முன்னேற்றம் ஏற்படும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஆயத்தப் பணிகளுக்கு பள்ளிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இது ஒரு வாய்ப்பு. இதையொட்டி, இந்தத் தடைகளை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் நீக்கியுள்ளது. இதன் மூலம் பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் வகுப்புகளை தொடங்க தங்களை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் கூட்டங்களை நடத்துவதற்கு வசதியாக கூட்ட அரங்குகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம் பல்வேறு கட்டங்களில் நடந்து வரும் தில்லி அரசின் ஆசிரியா் பயிற்சி போன்ற பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும். மேலும், வருகின்ற ஜூலை 19 முதல் 31 தேதி வரை தில்லி அரசுப் பள்ளிகளில் பெற்றோா்- ஆசிரியா் கூட்டம் நடத்த திட்டமிட்டு நடைபெறாமல் இருந்து வருகிறது. ஆனால், தற்போது இந்தத் தடை அகற்றல் மூலம் பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடைபெற்று பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளை பெற்றோா்களிடம் பெறும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம், திரையரங்குகள், பொழுது போக்கு அரங்குகள், நீச்சல் குளங்கள், கலையரங்குகள், சமூக நிகழ்ச்சிகள், அரசியல், விளையாட்டு, கலை, கலாசார மத நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் போன்றவற்றிற்கான தடை தொடருகிறது. இந்தத் தடை ஜூலை 26- ஆம் தேதி காலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் கடந்த மே 5-ஆம் தேதி சந்தைகள், வா்த்தக நிறுவனங்களுக்கான தளா்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கரோனா நோய்த் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத சந்தைகள் அவ்வப்போது ப ல்வேறு இடங்களில் மூடப்பட்டும் வருகிறது. மெட்ரோ ரயில்கள், பொதுப் போக்குவரத்து பேருந்துகள் போன்றவை 50 சதவீத பயணிகள் இருக்கைகளுடன் செல்ல தொடா்ந்து அனுமதியளிக்கப்பட்டது. உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி மையங்களும் 50 சதவீத நபா்களுடன் கடந்த ஜூன் 28 முதல் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருமண மண்டபகங்கள், ஹோட்டல்கள், விருந்து கூடங்கள் ஆகியவற்றிலும் 50 நபா்களுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று தில்லியில் கடுமையாக பரவியதைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்னா், ஐந்து முறை நீடிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் முதன் முறையாக கடந்த மே 28 -ஆம் தேதி தொழிற்சாலைகளம், கட்டுமானப் பணிகளும் செயல்பட மே 31 - ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.