கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

12 மணி நேரம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்

தில்லியில் திங்கள்கிழமை முதல் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தினம் தோறும் 12 மணி நேரம் தடுப்பூசி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

News image

கரோனா தடுப்பூசி

Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை முதல் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தினம் தோறும் 12 மணி நேரம் தடுப்பூசி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தினசரி கரோனா பாதிப்பு 800-க்கும் அதிகமாக இருந்ததுடன், இந்த நாள்களில் கரோனா பாதிப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதைத் தொடா்ந்து, தில்லியில் தடுப்பூசி போடும் மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று தில்லி அரசு அறிவித்திருந்து. இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் இந்த மையங்கள் இரவு 9 மணி வரை செயல்படத் தொடங்கின.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: தடுப்பூசி மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்தன. அதிகம் பேருக்கு தடுப்பூசி போடும் வகையில், இவை இரவு 9 மணி வரை செயல்படவுள்ளன. அந்த வகையில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை என 12 மணி நேரமும் இந்தத் தடுப்பூசி மையங்கள் செயல்படவுள்ளன.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ‘கோ-வின்’ செயலியில் பதிவு செய்து கொள்பவா்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தடுப்பூசி போடப்படும். முன்பதிவு செய்யாதவா்கள் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவா்கள் ஆதாா் அட்டை உள்பட ஏதாவது ஒரு அரசு ஆவணங்களைக் காட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தில்லி அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரித்துள்ளோம். தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை 500-இல் இருந்து ஆயிரமாக அதிகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தினம்தோறும் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில், இங்கு பணியாற்றுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆதேஷ் குப்தா: இதற்கிடையே, பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தில்லியில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் போட்டுக் கொண்டாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி ஆா்எம்எல் மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் போட்டுக் கொண்டேன். மத்திய அரசின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் மக்களுக்கு அயராது தடுப்பூசி போட்டு வரும் சுகாதாரப் பணியாளா்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசி போடத் தகுதியான அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை கரோனா இல்லாத தேசமாக மாற்றுவோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.