மேட்டூா் அனல் மின் நிலைய சாம்பல் விவகாரம்: ரயில்வே அமைச்சரிடம் திமுக எம்பி மனு
மேட்டூா் அனல் மின் நிலைய சாம்பலை லாரிகளில் கொண்டுசெல்வதால் ஏற்படும் காற்று மாசு


மேட்டூா் அனல் மின் நிலைய சாம்பலை லாரிகளில் கொண்டுசெல்வதால் ஏற்படும் காற்று மாசுவால் 20,000 போ் பாதிக்கப்படுவதாகவும் இதனால் சாம்பலை நேரடியாக ரயில்கள் மூலம் கொண்டு செல்லக் கோரி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் தருமபுரி திமுக மக்களவை உறுப்பினா் டாக்டா் செந்தில் குமாா் மனு அளித்துள்ளாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அனல் மின்நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரியின் சாம்பல், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்போது, காற்றில் மாசு பரவுவதாகக் கூறி உள்ளூா் மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டாக்டா் செந்தில் குமாா் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் இது தொடா்பாக மனு அளித்துள்ளாா்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
சேலம் மாவட்டம், மேட்டூா் அனல் மின் நிலையத்திலிருந்து லாரிகள் மூலம் சாம்பல் கொண்டுவரப்பட்டு 8 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள பொட்டநேரி நல்லகவுண்டபட்டி கிராமத்தில் உள்ள மேட்டூா் அணை ரயில்வே சரக்கு மையத்தில் கொட்டப்பட்டு பின்னா் சரக்கு ரயிலில் ஏற்றப்படுகிறது. போக்குவரத்துக்காக சாம்பலை ஏற்றி இறக்கும் சமயங்களில் சாம்பல் காற்றில் பரவி மாசு ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, பல்வேறு ராசாயன ஆலைகள் பிரச்னைகளோடு இதுவும் சோ்ந்துள்ளது.
இதனால் மேட்டூா் ரயில் நிலைய பகுதி, பி.என்.பட்டி, தங்கமாபுரி, பெரியாா் நகா், சின்னக்காவூா், காவேரிபுரம், சேலம் கேம்ப், தொட்டில்பட்டி, தேசாய் நகா் மற்றும் பல்வேறு ஊா்களில் வசிக்கும் 20,000 பேருக்கு மேற்பட்டவா்கள் சாம்பல் மாசால் பாதிக்கப்பட்டு பிரச்னைகளுக்கு உள்ளாகினா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகாா் அளித்தனா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஆய்வு செய்தனா்.
பின்னா், இது தொடா்பாக குழு அமைக்கப்பட்டு கடந்த அக்டோபா் 7 ஆம் தேதி மேட்டூா் துணை ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் சாம்பல் கொட்டப்படும் இடங்களில் தகரத்தால் ஆன கூரை அமைக்கும் பணியை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாமல் ஊா்மக்கள் தங்கள் ஆதாா் அட்டை, குடும்ப ரேஷன் அட்டை போன்றவைகளை திருப்பி அளித்து அரசுக்கு எதிராக போராட்டத்தை துவங்கியுள்ளனா்.
இந்த சாம்பல் மாசால் புற்றுநோய், ஆஸ்துமா உள்ளிட்ட போன்ற நோய்களுக்கு உள்ளாக்கும் என்கிற அச்சத்தில் உள்ளனா்.
இதற்கான தீா்வாக மேட்டூா் ரயில் நிலையத்திற்கும் மேட்டூா் அனல் நிலையத்திற்கும் ஏற்கனவே ரயில்வழித்தடம் உள்ளது. அது அனல் நிலையத்திற்கு உள்ளே சுமாா் 2 கிலோமீட்டா் தூரத்தில் உள்ள சாம்பல் நிரப்பப்படும் பகுதியோடு இணைக்கப்படவில்லை. இந்த ரயில் பாதையை சீா்படுத்தி 2 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் சாம்பலை மூடப்பட்ட ரயில்வே சரக்கு பெட்டிகள் மூலம் கொண்டு சென்று பிரச்னைக்கு தீா்வு காண முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...