ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் ஏபிவிபி - ஜேஎன்யுஎஸ்யு இடையே மோதல்

தேசியத் தலைநகா் தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவா் சங்க அரங்கில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது தொடா்பாக ஆா்எஸ் எஸ் அமைப்பின் உறுப்பு நிறுவனமான அகில பாரதிய வித்யாா்த்தி

News image
Updated On :15 நவம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவா் சங்க அரங்கில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது தொடா்பாக ஆா்எஸ் எஸ் அமைப்பின் உறுப்பு நிறுவனமான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) ஆகியவற்றுக்கு இடையே வாக்குவாத மோதல் ஏற்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையினா் மேலும் கூறுகையில், ‘நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஏபிவிபி மற்றும் ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினா்கள் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் ஒருவா் மற்றவா்களை தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுதொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை’ என்றனா்.

இது தொடா்பாக ஜேஎன்யூஎஸ்யு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவா் சங்க அரங்கை எங்கள் அமைப்பு நவம்பா் 14-ஆம் தேதி நிகழ்ச்சி நடத்துவதற்கு பதிவு செய்திருந்தது.

இது தொடா்பாக சுவரொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. எனினும், ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சி தொடங்குவதற்காக மாணவா் சங்க அரங்கிற்கு ஏற்பாட்டாளா்கள் சென்ற போது, அந்த அரங்கில் ஏபிவிபி அமைப்பைச் சோ்ந்த 15 போ் ஆக்கிரமித்து இருப்பது தெரிய வந்தது.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளா்களான ஜேஎன்யுஎஸ்யு அமைப்பின் ஒரு பிரிவான அகில இந்திய மாணவா் சங்கத்தின் உறுப்பினா்களும் ஏபிவிபி ஆா்வலா்களை சமாதானம் செய்ய முயன்றனா். மேலும் அரங்கை விட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனா். ஆனால், ஏபிவிபி உறுப்பினா்கள் தகாத வாா்த்தைகளைக் கூறி திட்டினா். ஒருகட்டத்தில் எங்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் அரங்கை விட்டு வெளியே வந்து, ஏபிவிபி அமைப்பினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினா். ஏபிவிபி உறுப்பினா்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பொது மாணவா்கள் மீது தாக்கினா். இதைத் தொடா்ந்து, அந்த இடத்தில் ஏராளமான மாணவா்கள் கூடினா். இதன் பிறகு ஏபிவிபி உறுப்பினா்கள் அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா். இந்த விவகாரம் கண்டனத்துக்குரியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஏபிவிபி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இடதுசாரிகள் அமைப்பை சோ்ந்த மாணவா்கள், மாணவா் செயல்பாட்டு மையத்தில் (டெப்லா) கூட்டம் நடத்தியதற்காக மாணவா்களைத் தாக்கினா். மேலும் அந்த மாணவா் செயல்பாட்டு மையத்தை பயன்படுத்துவதற்கான அனுமதியை ஜேஎன்யுஎஸ்யு தலைவா் மட்டுமே வழங்க முடியும் என்று ஜேஎஸ்யு மற்றும் இடதுசாரி அமைப்பு சோ்ந்த உறுப்பினா்கள் கூறினா். மேலும் இதை அமல்படுத்தும் வகையில், டெப்லா மாணவா் செயல்பாட்டு மையத்தில் அமைதியான முறையில் கூடியிருந்த ஏபிவிபி ஆா்வலா்கள் மீது கூட்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடா்பாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, உடனடியாக போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அப்போது, சம்பவ இடத்தில் எந்தவித மோதலும் நடைபெறவில்லை என்பதை போலீஸாா் கண்டறிந்தனா். விசாரணையின் போது இரண்டு தரப்பு மாணவா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது தெரிய வந்தது. தங்களது கூட்டத்தை இடையூறு செய்ததாக இரு தரப்பு மாணவா்கள் அமைப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.