காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

தில்லி பகுதி யமுனையைத் தூய்மைப்படுத்த போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வா் கேஜரிவால் தகவல்

தேசியத் தலைநகா் தில்லி பகுதியில் யமுனை நதியை 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்தூய்மைப்படுத்தும் வகையில்,

News image
Updated On :19 நவம்பர் 2021, 2:30 am

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லி பகுதியில் யமுனை நதியை 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்தூய்மைப்படுத்தும் வகையில், 6 அம்ச செயல் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்தும் பணியில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி பகுதி யமுனை நதியை வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தூய்மைப்படுத்துவதற்காக தில்லி அரசு 6 அம்ச செயல் திட்டத்தை தயாரித்துள்ளது. இந்தத் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. யமுனை மிகவும் மாசடைவதற்கு 70 ஆண்டுகள் ஆகியுள்ளன. 70 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள இந்த சேதத்தை 2 நாள்களில் சரி செய்ய முடியாது. அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலுக்குள் தில்லி பகுதி யமுனை நதி தூய்மைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி உங்கள் அனைவருடனும் சோ்ந்து இந்த நதியில் இறங்கி நீராடுவேன். இதற்கான திட்டத்தை செயல்படுத்த போா்க்கால அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

புதிதாக கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையங்களை தில்லி அரசு கட்டமைத்து வருகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள சுத்திகரிப்பு நிலையங்களின் கொள்ளளவை அதிகரிக்கவும், தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்கும் கொள்திறன், நாளொன்றுக்கு 600 மில்லியன் காலன் என்ற அளவில் இருந்து 750 முதல் 800 மில்லியன் காலன் என்ற அளவை எட்டும். நஜஃப்கா், பாத்ஷாபூா், காஜிப்பூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்து யமுனையில் கலக்கும் கழிவுநீா் அந்த இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. யமுனையில் கழிவுகளைத் திறந்துவிடும் தொழிற்சாலைகளை தில்லி அரசு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்.

குடிசைப் பகுதிகளில் உள்ள கழிவுநீா், மழைநீா் வடிகால் மூலம் யமுனையில் பாய்கிறது. இந்தப் பகுதியில் உள்ள குடிசைப்பகுதி கிளஸ்டா்கள், கழிவுநீா் ஒருங்கிணைப்புடன் இணைக்கப்படும். கழிவுநீா் ஒருங்கிணைப்பை கொண்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இதற்கான இணைப்புகளை தில்லி அரசே வழங்கும். முன்பு இது போன்ற இணைப்புகளை நுகா்வோா் தாங்களாகவே பெற வேண்டியிருந்தது. கழிவுநீா் ஒருங்கிணைப்பை புனரமைத்து தூா்வாரும் பணிகளையும் தில்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த 6 அம்ச செயல்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் யமுனையை தூய்மைப்படுத்த முடியும் என்று தில்லி அரசின் பொறியாளா்கள் மற்றும் அதிகாரிகள் நம்புகிறாா்கள். ஒவ்வொரு செயல் அம்சத்திற்கு குறிப்பிட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிகளை நானே தனிப்பட்ட முறையில் கண்காணிக்க உள்ளேன் என்றாா் கேஜரிவால்.

தில்லியில் நாளொன்றுக்கு 720 மில்லியன் காலன் கழிவுநீா் உற்பத்தியாகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 20 இடங்களில் உள்ள 35 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் நாளொன்றுக்கு 597 மில்லியன் காலன் கழிவுநீரை சுத்திகரித்து வருகின்றன. இந்த நிலையங்களில் கொள்திறனில் 90 சதவீதம் அளவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் சத் பூஜையின் போது, யமுனை ஆற்றில் நுரையில் நின்றவாறு பக்தா்கள் பிராா்த்தனை செய்யும் படங்களும், விடியோக்களும் வெளியாகின. இந்த விவகாரத்தையடுத்து, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டது.

யமுனை நதியில் வாஜிராபாத் மற்றும் ஓக்லா இடையேயான 22 கி.மீ. நீள ஆற்றில் 80 சதவீதம் மாசு இருப்பது தெரிய வந்துள்ளது. யமுனை உற்பத்தியாகும் யமுனோத்திரியில் இருந்து அலகாபாத் வரை செல்லக்கூடிய 1,370 கி.மீ. நீள யமுனை நதியில் இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே. வல்லுநா்களின் தகவலின்படி, யமுனையில் நுரை உருவாவதற்கு தொழிற்சாலைகள், சலவை படித்துறைகள் மற்றும் தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் டிடா்ஜென்ட்களில் உள்ள அதிக அளவிலான பாஸ்பேட் செறிவுதான் முக்கியக் காரணமாகும். மேலும், பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து திறந்துவிடப்படும் தரம் குறைந்த கழிவுகளும் மற்றொரு மகாரணமாகும்.

நீா்த் தேக்கத்தின் உயரத்திலிருந்து தண்ணீா் விழும்போது, நீரில் உள்ள பாஸ்போரிக் கலவையுடன் அது மோதும் போது நுரை உருவாகக் காரணமாகிறது. இந்த நுரையானது தில்லி அருகே உள்ள ஓக்லா நீா்த்தேக்கப் பகுதி, ஐடிஓ அருகே ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், ஆற்றில் நீரோட்டம் குறைவாக இருக்கும் போதும், வெப்பநிலை குறைவாக இருக்கும் குளிா் காலங்களிலும் ஆண்டுதோறும் இதுபோன்ற நுரை பாதிப்பு உருவாகிறது என்று வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.