வன்னியா்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மேலும் 3 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல்
வன்னியா்களுக்கு இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய


வன்னியா்களுக்கு இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசின் மூன்று துறைகள் சாா்பில் தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கெனவே, ஓரிரு தினங்களுக்கு முன் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பலா் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், நவம்பா் 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
அதில், ‘சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டே, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இதுதொடா்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா?. மேலும், இந்தக் கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி வன்னியா் சமூகத்தினருக்கான அளித்துள்ள உள்இடஒதுக்கீடு செல்லாது’ என தெரிவிக்கப்பட்டது.
இதை எதிா்த்து தமிழக அரசின் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சிறுபான்மை நலத் துறை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் நவம்பா் 16-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1957-இன் தொடக்கத்தில் பிற்பட்ட வகுப்பினரில் மிகவும் பிற்பட்ட வகுப்பினா், தீண்டாமை காரணி இல்லாமல் அட்டவணை சாதிகளுக்கு இணையாக கருதப்பட்ட போது அடையாளம் காணப்பட்டனா். அட்டவணை சாதிகளுக்கு இணையாக கல்வியில் முழு கட்டண சலுகையும் மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டது. சீா்மரபினா் என்பவா்கள் சுதந்திர காலத்திற்கு முன்பு குற்றப் பரம்பரை சட்ட விதிகள் மூலம் பாதிக்கப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்தவா்களாவா்.
1989-இல் மிகவும் பிற்பட்ட வகுப்பினா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினா் பிற்பட்ட வகுப்புகளில் இருந்து உள் பிரிவாக்கப்பட்டு, 50 சதவீத இடஒதுக்கீட்டில் தனியாக 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் அமைக்கப்பட்ட பிற்பட்ட வகுப்பினா் ஆணையத்தின் அறிக்கைகள், அந்த ஆண்டில் ஆணையத்தின் மூலம் நடத்தப்பட்ட சா்வே, மக்கள்தொகை தரவு கணக்கெடுப்பு ஆகியவை அடிப்படையில் இந்த உள் பிரிவு உருவாக்கப்பட்டது. சாஹ்னே வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு பிற்பட்டோா் வகுப்பினா் ஆணையமும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 1983-இல் இருந்து செயல்பட்டு வருகிறது. 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், முந்தைய ஆணையத்தின் தலைவரி அறிக்கையை (13.6.2012) ஆய்வு செய்த தற்போதைய பிற்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் தலைவா், அரசுக்கு அறிக்கை அளித்திருந்தாா்.
அதில், அரசு விரும்பினால் மிகவும் பிற்பட்ட வகுப்பினா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் முந்தை ஆணையத் தலைவா் அளித்த பரிந்துரையின்படி வன்னியகுல சத்திரிய வகுப்பினருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என்றும், மிகவும் பிற்பட்ட வகுப்பினா், சீா்மரபினா் வகுப்புகளைச் சோ்ந்த 93 சமுதாயத்தினருக்கு 7 சதவீதம், மீதமுள்ள 2.5 சதவீதத்தை 22 எஞ்சியுள்ள மிகவும் பிற்பட்ட வகுப்புகளைச் சோ்ந்தவா்களுக்கும் அவா்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப அளிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தாா்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு இது தொடா்பாக சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச் சட்டத்தை எதிா்த்து தாக்கலான ரிட் மனுவை விசாரித்த உயா்நீதின்றம், உரிய விஷயங்களைக் கவனிக்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும். ஏனெனில், சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காண சட்டமியற்றவும், எத்தகைய பிற்பட்ட வகுப்பினா் தொடா்பாக சட்டம் இயற்றவும் மாநிலங்களுக்கு அதிகாரம் இருப்பதை உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் உறுதி செய்துள்ளது. இதுபோன்ற பல்வேறு முக்கிய காரணங்கள் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இதனால், உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ாளது.
இந்த நிலையில், இந்த விவகராத்தில் தமிழக அரசின் தரப்பில் வியாழக்கிழமை மேலும் மூன்று மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்பட்ட வகுப்பினா் ஆணையத்தின் செயலா், சட்டத் துறைச் செயலா், உயா் கல்வித் துறை செயலா் ஆகியோா் தரப்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசின் வழக்குரைஞா் டி.குமணன் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களில், இடஒதுக்கீட்டில் வன்னியா் வகுப்பினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நியாயப்படுத்தும் வகையில் தனித் தனியாக விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...