தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆறுமுகசாமி ஆணையம் விவகாரம்: அப்பல்லோ மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நவ.10-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக

News image

உச்சநீதிமன்றம்

Updated On :29 அக்டோபர் 2021, 1:37 am

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் அப்பல்லோ தரப்பில் இறுதியாக வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, விசாரணை ஆணையத்தின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் அப்பல்லோ தரப்பில் முதல் நாள் வாதத்தின் போது ஆணையத்தின் செயல்பாடுகள் தொடா்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 2-ஆவது நாளாக நடைபெற்ற வாதத்தின் போது மறைந்த முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்தும், ஆணையத்தின் விசாரணை அதிகார தகுதி குறித்தும் வாதம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அப்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம் முன்வைத்த இறுதி வாதம்: மறைந்த முதல்வா் ஜெயலலிதா எந்த சூழலில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா் என்பதை விசாரிக்கும் அதிகார வரம்பு ஆணையத்திற்கு உள்ளது. அந்த விவகாரத்தில் நாங்கள் குறை ஏதும் சொல்லவில்லை. ஏனெனில், உண்மை கண்டறியும் ஆணையம் அது. ஆனால், மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை போதுமான வகையில் இருந்ததா, இல்லையா, உரிய வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதை விசாரிக்கும் விவகாரத்தில்தான் கேள்வி எழுகிறது. ஆணையத்தில் மருத்துவ வல்லுநா்கள் இடம் பெறாத நிலையில் அதுபோன்று எப்படி விசாரிக்க முடியும். அதுகுறித்து ஆணையம் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்?

மேலும், ஆணையம் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை மருத்துவா்களிடம் கேட்ட கேள்வியையே செவிலியா்களிடம் கேட்டுள்ளனா். சாட்சி விசாரணையும் முறைப்படி நடைபெறவில்லை. தகவல்கள் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்ட விதம் என பல்வேறு விஷயங்களில் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக உள்ளது. இதனால், அதன் ஒட்டுமொத்த விசாரணை நடைமுறைகைளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா். மேலும், பல்வேறு வழக்குகளில் இதேபோன்ற விவகாரத்தில் நீதிபதிகள் அளித்த தீா்ப்பை மேற்கோள்காட்டியும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரத்திடம் வியாழக்கிழமை முன்வைத்த வாதங்கள் தொடா்புடைய விவரத்தை எழுத்துப்பூா்வ வாதமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் தரப்பில் வாதத்தை முன்வைக்கும் வகையில், வழக்கு விசாரணையை நவம்பா் 10-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனா்.

வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆகியோா் ஆஜராகி இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.