ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழு உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், மருத்துவக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Updated on
2 min read

புது தில்லி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், மருத்துவக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுவில் இடம் பெறும் மருத்துவ வல்லுநா்களை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் நியமிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தொடா்ந்து பல தினங்கள் விசாரணை நடைபெற்றது. அப்போது, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் தமிழக அரசு, ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் வாத-பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, ஆணையம் விசாரணை நடத்துவதற்குப் போதிய இடவசதியை அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதை ஏற்று, தமிழக அரசுத் தரப்பிலும் விசாலமான இடவசதி அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த நவம்பா் 30-ஆம் தேதி இறுதிவிசாரணை முடிந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி அடங்கிய அமா்வு, உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், அந்த உத்தரவு திங்கள்கிழமை வெளியானது. அதில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த வழக்கில் தொடா்புடைய தரப்புகளின் வாதங்களைக் கேட்கும் போது, உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த பலவீனமும் இருப்பதாக நாங்கள் பாா்க்கவில்லை. எனினும், இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும் போது ஆவணங்கள், வாக்குமூலங்கள் மற்றும் ஆணையத்தின் பதிவுகளில் உள்ள ஆவணங்கள் ஆகியவற்றை மேல்முறையீட்டாளரான அப்பல்லோ மருத்துவமனையிடம் அளிக்க வேண்டும் என்பது நியாயமானதாகவும் சரியானதாகவும் கருதுகிறோம்.

எந்த சாட்சியையோ அல்லது தனிநபரையோ குறுக்குவிசாரணை நடத்துவதற்கான முறையான மனுவை ஆணையத்திடம் மேல்முறையீட்டாளரான அப்பல்லோ மருத்துவமனை விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. அதுபோன்று விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டால், ஆணையம் அதை பரிசீலித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த வழக்கை முடித்துவைப்பதற்கு ஆணையத்திற்கு உதவ ஒரு மருத்துவக் குழுவை அமைப்பது நியாயமானதாகவும், சரியானதாகவும் இருக்கும் என கருதுகிறோம். இந்த நோக்கத்திற்காக, புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநா், மறைந்த தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட துறையில் உள்ள நிபுணா்கள், மருத்துவா்கள் அடங்கிய குழுவை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அவ்வாறு அமைக்கப்படும் மருத்துவக் குழுவிடம் நடைமுறைகளின் முழுமையான ஆவணங்களை வழங்குமாறு ஆணையத்திடம் நாங்கள் கூறத் தேவையில்லை.

நியமிக்கப்படும் மருத்துவக் குழு, ஆணையத்தின் நடைமுறைகள் அனைத்திலும் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், அறிக்கையின் நகலை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். இது போன்ற அறிக்கையின் நகல் அப்பல்லோ மருத்துவமனையிடமும், 3-ஆவது எதிா்மனுதாரரிடமும் (வி.கே. சசிகலா) அளிக்கப்பட வேண்டும். மேலும், மூன்றாவது எதிா்மனுதாரா் இதுவரை தனது சாட்சியை அளிக்கவில்லை என்று தெரிவித்திருப்பதால், விசாரணையின் உரிய நிலையில் அவரது சாட்சியை அளிக்க ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com