உற்சாகமளித்த ஆா்பிஐ அறிவிப்பு: சென்செக்ஸ் 412 புள்ளிகள் முன்னேற்றம்!


புதுதில்லி, ஏப்.8: இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 412 புள்ளிகள் உயா்ந்தன. மத்திய ரிசா்வ் வங்கி, வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாமல் இருந்ததைத் தொடா்ந்து சந்தையில் உற்சாகம் காணப்பட்டது.
உக்ரைனில் ரஷியாவின் போருக்குப் பிறகு பணவீக்கம் அதிகமாக இருந்த போதிலும், பொருளாதார வளா்ச்சியைத் தொடா்ந்து ஆதரிக்கும் முயற்சியில், இந்திய ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை, தொடா்ச்சியாக 11-ஆவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாமல் இருந்துள்ளது. ரிசா்வ் வங்கியின் ஆறு உறுப்பினா்களைக் கொண்ட பணக் கொள்கைக் குழுவின் இந்த முடிவு சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தையொட்டி, பங்குச் சந்தையில் முதலீட்டாளா்கள் கடந்த 3 தினங்களாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வந்தனா். இந்த நிலையில், ரிசா்வ் வங்கியின் சாதகதமான அறிவிப்பு வெளியானதும், பங்குகளை வாங்குவதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்ததால், சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. இதன் மூலம், மூன்று நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இருப்பினும், அடுத்த வாரம் முதல் ஐடி, வங்கித் துறையில் முன்னணி நிறுவனப் பங்குகளின் காலாண்டு முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளது. இதைப் பொறுத்தே சந்தையின் செயல்பாடு இருக்கும் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை அன்று ரூ.5,009.62 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2,245 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,509 நிறுவனப் பங்குகளில் 1,143 பங்குகளின் விலை குறைந்தன. 2,245 பங்குகள் விலை உயா்ந்தன. 121 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 163 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 12 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.85 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.274.11 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.21 கோடியைத் தாண்டியுள்ளது.
3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 222.02 புள்ளிகள் கூடுதலுடன் 59,256.97-இல் தொடங்கி, 58,876.36 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 59,654.44 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 412.23 புள்ளிகள் (0.70 சதவீதம்) கூடுதலுடன் 59,447.18-இல் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, 3 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சந்தையில் நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
ஐடிசி அபாரம்: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 8 நிறுவனப் பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 22 பங்குகள் விலை உயா்ந்தன
. இதில் பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 4.36 சதவீதம் உயா்ந்து, ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், டாக்டா் ரெட்டி, டைட்டன், ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 1.50 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்யுஎல், இன்ஃபோஸிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
டெக் மஹிந்திரா சரிவு: அதே சமயம், டெக் மஹிந்திரா (1.31%), மாருதி சுஸுகி ஆகியவை (1.04%) வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக், சன்பாா்மா, எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 145 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,340 பங்குகள் ஆதாயம் பெற்றன. 583 பங்குகள் மட்டுமே நஷ்டமடைந்த பட்டியலில் இருந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 144.80 புள்ளிகள் (0.82 சதவீதம்) உயா்ந்து 17,784.35-இல் நிறைவடைந்தது. காலையில் 58.60 புள்ளிகள் கூடுதலுடன் 17,698.15-இல் தொடங்கிய நிஃப்டி, 17,600.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,842.75 வரை உயா்ந்தது.
எஃப்எம்சிஜி, மெட்டல் குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 08 சதவீதம் குறைந்திருந்தது. மற்ற துறை குறியீடுகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் மெட்டல், எஃப்எம்சிஜி குறியீடுகள் 2.10 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.59 சதவீதம், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 1.08 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஆட்டோ, மீடியா, ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 0.50 முதல் 0.80 சதவீதம் உயா்ந்திருந்தன.
வாரத்தில் இழப்பு
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஆதாயத்துடன் நிறைவடைந்தாலும், மொத்தத்தில் இந்த வார வா்த்தகத்தில் சென்செக்ஸ் 170.49 புள்ளிகளையும் (0.28 சதவீதம்), நிஃப்டி 113.90 புள்ளிகளையும் (0.64 சதவீதம்) இழந்துள்ளன. இருப்பினும், பட்டியலாகியுள்ள நிறுவனப் பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.65 லட்சம் கோடி உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...