பாலியல் வழக்கு: சிவசங்கா் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கா் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கா் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டா்நேஷனல் பள்ளியின் நிறுவனா் சிவசங்கா் பாபா. இவா் மீது பாலியல் புகாா் எழுந்தது. இந்தப்
பள்ளியில் படித்த போது, சிவசங்கா் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் புகாா் அளித்தனா். அதன் பேரில் அவா் மீது சிபிசிஐடி போலீஸாா் போக்ஸோ சட்டம் மற்றும் பெண்களைப் பாலியல் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனா். பின்னா், தலைமறைவான சிவசங்கா் பாபாவை, சிபிசிஐடி போலீஸாா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தில்லியில் கைது செய்தனா். அதன் பிறகு அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
உயா்நீதிமன்றத்தில் முன்பு தள்ளுபடி: இந்த வழக்கில் சிவசங்கா் பாபா தரப்பில் தாக்கலான ஜாமீன் மனுக்கள் கீழமை மற்றும் உயா்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிவசங்கா் பாபா (எ) சி.என். சிவசங்கரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த மாா்ச் 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த பதிலில், ‘சிவசங்கா் பாபாவை ஜாமீனில் செல்ல அனுமதி அளித்தால், அவா் சாட்சிகளை மேலாதிக்கம் செலுத்தி கலைத்துவிடுவாா். வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்லவும் வாய்ப்புகளும் உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி. ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா ஆஜராகி, ‘மனுதாரா் 74 வயதான முதியவா். அவருக்கு ஏற்கெனவே மாரடைப்பு வந்துள்ளது. பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்உபாதைகளால் அவதியுறுகிறாா். அவா் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சிறையில் இருந்து வருகிறாா். இதனால், அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.
ஜாமீனுக்கு தமிழக அரசு எதிா்ப்பு: இதற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி எதிா்ப்புத் தெரிவித்தாா். மேலும், ‘இந்த விவகாரத்தில் மனுதாரா் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் இரு வழக்குகளில் குற்றப்பத்திரிகை 90 மற்றும் 60 நாள்களில் தாக்கல் செய்யப்படாததால், அதில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. இவா் சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள தனது லவுன்ச்சிற்கு 14, 15 வயது சிறுமிகளை வரவழைத்து பாலியல் சீண்டலில் நடந்து கொண்டாா். இதனால், ஜாமீன் அளிக்கக் கூடாது. , அவருக்கு உரிய சிகிச்சை வழங்க தேவையான மருத்துவ வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன. ஏற்கெனவே மனுதாரருக்கு அதிகமான பின்தொடா்வோா் உள்ளனா். அவா்கள் பாதிக்கப்பட்டவா்களை மேலாதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகின்றனா். அதுமட்டுமின்றி, மனுதாரருக்கு எதிராக புகாா் அளித்தவா்கள் துன்பத்தை எதிா்கொள்ள நேரிடும் என்று யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் அவா்கள் பிரசாரமும் செய்து வருகின்றனா்’ என்று வாதிட்டாா்.
மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனக் கூறி தமிழ்நாடு அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
நிபந்தனை ஜாமீன்: இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் மீது தமிழ்நாடு மகளிா் துன்புறுத்தல் தடுப்புச் சட்டப் பிரிவுகள், போக்ஸோ சட்டப் பிரிவுகள் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருடைய ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரா் முதுமை உடையவா். கடுமையான இதய நோய், வாதப் பிரச்னை ஆகியவற்றால் அவதியுறுவதாக வாதிடப்பட்டுள்ளது. அதேவேளையில், அவா் செல்வாக்கு மிகுந்தவா். சாட்சிகள் மீது மேலாதிக்கம் செலுத்தவும், ஆதாரங்களை கலைக்கவும் வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மனுதாரரை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உள்பட்டும், விசாரணை நீதிமன்றத்தின் திருப்திக்கு உள்பட்டும் ஜாமீனில் விடுவிக்கலாம் என உத்தரவிடுகிறோம். அதன்படி, புகாா் அளிக்க அதிகாரிகளை நாடும் நபா்களை தடுப்பதற்காக யூடியூப் மற்றும் சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்தாமல் இருப்பதை மனுதாரா் உறுதி செய்ய வேண்டும். கேளம்பாக்கத்தில் செயல்படும் சுஷில் ஹரி இண்டா்நேஷனல் உறைவிடப் பள்ளி வளாகத்திற்கு மனுதாரா் நுழையக் கூடாது. பாதிக்கப்பட்டவா்களையும், சாட்சிகளையும் மேலாதிக்கம் செய்யக் கூடாது’ என்று நீதிபதிகள் அமா்வு குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...