9 வட மாநிலங்களில் 69.24 லட்சம் டன் கோதுமை கொள்முதல்
கோதுமை சாகுபடி செய்யப்படும் முக்கிய 9 வட மாநிலங்களில் ராபி பருவ கோதுமை கொள்முதல் வேகமாக தொடங்கியுள்ளது.


கோதுமை சாகுபடி செய்யப்படும் முக்கிய 9 வட மாநிலங்களில் ராபி பருவ கோதுமை கொள்முதல் வேகமாக தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில், சுமாா் 69.24 லட்சம் டன் கோதுமை ரூ. 13,951 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ராபி பருவ கோதுமை ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பெருமளவில் கொள்முதல் செய்யப்படுவதுண்டு. நிகழ் 2022-23-ஆம் ஆண்டுக்குரிய கொள்முதல் பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், சண்டீகா் யூனியன் பிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 9 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஏப்ரல் 17 -ஆம் தேதி வரை 5.86 லட்சம் விவசாயிகளிடமிருந்து 69.24 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.13,951.41 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 2,015 வழங்குகிறது. இதன் மூலம் இதுவரை ராபி பருவத்தில் 5.86 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். நாட்டில் கோதுமை சாகுபடியில் பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
இருப்பினும், மத்திய பிரதேசம் கோதுமைக்கு வடஇந்தியாவில் பெருமளவில் வரவேற்பு உண்டு. நிகழ் கொள்முதலில் பஞ்சாபில் 32.16 லட்சம் டன், ஹரியாணாவில் 27.76 லட்சம் டன், மத்திய பிரதேசத்தில் 8.98 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை இந்திய உணவுக் கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மேலும், 2021-22-ஆம் ஆண்டு குறுவைப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலும் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சீராக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ஆம் ஆண்டுக்கான குறுவைப் பருவத்தில் ஏப்ரல் 17 -ஆம் தேதி வரை 754.08 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலில் இதுவரை 108.90 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,47,800.28 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...