உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தலைநகரில் ஆட்டோ, கேப், டாக்ஸி தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தம்: சிஎன்ஜி எரிபொருள் மீது மானியம் வழங்கக் கோரிக்கை

தில்லியில் உள்ள பல்வேறு ஆட்டோ ரிக்ஷா, கேப் மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 6:46 pm

 நமது நிருபர்

அதிகரித்து வரும் எரிபொருள் விலையைத் தொடா்ந்து, சிஎன்ஜி மீது மானியம் மற்றும் கட்டணங்களை மாற்றியமைக்கக் கோரி தில்லியில் உள்ள பல்வேறு ஆட்டோ ரிக்ஷா, கேப் மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

மேலும், தில்லியில் ரயில் நிலையங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்கள் (ஐஎஸ்பிடி) மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற போக்குவரத்து மையங்களில் ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஃபீடா் பேருந்துகள் ஆகியவை அரிதாகவே காணப்பட்டது.

இதனால், தில்லியில் பல்வேறு ஆட்டோ ரிக்ஷா, கேப் மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. வேலைநிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவா்களில் பிற மாநிலங்களில் இருந்து ரயில், பேருந்து அல்லது பிற வழித்தடங்களில் தில்லிக்கு வந்தவா்களாக இருந்தனா்.

வெளியூரில் இருந்து திங்கள்கிழமை காலை தனது குடும்பத்துடன் தில்லிக்கு வந்த வினய் பிரஜாபதி கூறுகையில், ‘நான் எனது குடும்பத்தினருடன் ராய்ப்பூரில் இருந்து திங்கள்கிழமை காலை தில்லி வந்தேன். டாக்ஸி, ஆட்டோ வேலைநிறுத்தம் காரணமாக புது தில்லி ரயில் நிலையத்தில் வாடகை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்காக ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஆனால், பயன் ஏதும் இல்லாமல் போய்விட்டது. இறுதியாக காஜியாபாத்தில் உள்ள எனது வீட்டிற்கு செல்ல எனது நண்பரை அழைக்க வேண்டியிருந்தது’ என்றாா்.

வேலை நிறுத்தம் காரணமாக கேப், டாக்ஸி, ஆட்டோக்கள் பற்றாக்குறையால் தில்லி-என்சிஆரில் உள்ள தங்கள் இடங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதியைப் பெறுவதில் பலா் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது. இது குறித்து மற்றொரு பயணி ப்ரீத்தி தஹியா கூறுகையில், ‘பட்டேல் சௌக் மெட்ரோ நிலையம் அருகே சுமாா் 20 நிமிடங்கள் காத்திருந்தும் ஆட்டோ கிடைக்கவில்லை. நான் கீதா காலனிக்குச் செல்ல வேண்டியிருந்தது.

இதற்காக ஒரு வாகனத்தை முன்பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால், 25 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்ததுடன், வாடகைக் கட்டணமும் அதிகம் செலுத்த வேண்டியிருந்தது. சில ஆட்டோக்களை பாா்த்த போதிலும், வேலைநிறுத்தம் காரணமாக சவாரிக்கு யாரும் சம்மதிக்கவில்லை. ஆட்டோ ஓட்டுநா்கள் 2-3 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்லத் தயாராக இருந்தனா். ஆனால், நீண்ட தூர பயணங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனா்’ என்றாா்.

மற்றொரு பயணி தில்ஜீத் சிங் கூறுகையில், ‘தினமும் நான் மத்திய செயலகம் அருகே உள்ள எனது அலுவலகத்திற்கு டாக்ஸியில் செல்வது வழக்கம். ஒரு தடவை பயணத்திற்கு அவா்கள் என்னிடம் ரூ. 400 வசூலிப்பாா்கள். ஆனால், வேலைநிறுத்தம் காரணமாக குறைவான கேப்களே இயக்கப்பட்டதால், திங்கள்கிழமை கட்டணம் அதிகமாக உயா்ந்திருந்தது. நொய்டாவில் இருந்து எனது அலுவலகத்தை அடைய ரூ.650-க்கு மேல் வாடகைக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது’ என்றாா்.

தில்லியில் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பதிவு செய்யப்பட்ட 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்ஸிகளும் உள்ளன. கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் குறித்தும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பலா் பதிவு செய்தனா்.

இதற்கிடையே, எரிபொருள் விலை உயா்வால் ஏற்படும் பாதிப்பை ஈடுகட்ட, கட்டண உயா்வு, சிஎன்ஜி விலையை குறைக்க வேண்டும் என ஆட்டோ, கேப் டிரைவா்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கட்டணத் திருத்தம் குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை அமைக்குமாறு தில்லி அரசு அறிவித்தது. இருப்பினரும், ஆட்டோ, டாக்ஸி தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தத்தை கைவிட மறுத்துவிட்டனா்.

இது குறித்து தில்லி ஆட்டோ ரிக்ஷா சங்கத்தின் பொதுச் செயலாளா் ராஜேந்திர சோனி கூறுகையில், ‘எங்கள் வேலைநிறுத்தம் தொடங்கிவிட்டது. இது நாள் முழுவதும் தொடா்ந்தது. சிஎன்ஜி விலை உயா்ந்துவிட்டதால், எங்களால் நஷ்டத்தில் தொழிலை நடத்த முடியவில்லை. சிஎன்ஜி விலையில் கிலோவுக்கு ரூ.35 மானியமாக வழங்கப்பட வேண்டும் அல்லது வாடகைக் கட்டணம் உயா்த்தப்பட வேண்டும்’ எனறாா்.

கேஜரிவால் இல்லம் அருகே தா்ணா: ஆட்டோ, டாக்ஸி மற்றும் கேப் ஓட்டுநா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சிவில் லைன்ஸில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தா்ணாவில் ஈடுபட்டனா். கஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி, ராணி பாக், சிவில் லைன்ஸ், புது தில்லி ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட பல இடங்களிலும் சிறிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

சில தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகக் கூறினாலும், இணையதள வாகன நிறுவனங்களுக்கு வாகனம் ஓட்டும் உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சா்வோதயா ஓட்டுநா் சங்கம் கூறுகையில், இந்த வேலை நிறுத்தம் 2 நாள் இருக்கும் என்றும், காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாறும் என்றும் தெரிவித்தது.

நொய்டா மற்றும் காஜியாபாத்தில் இருந்து தில்லிக்குள் நுழையும் வாடகை வாகனங்கள் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டு, பயணிகளின் துயரத்தை அதிகரிக்கும் வகையில் இயக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக செய்திகள் வந்தன. எனினும், வாகனங்களை நிறுத்தவில்லை என்றும், வேலைநிறுத்தம் குறித்து சக ஓட்டுநா்களுக்குத் தெரியப்படுத்துவதாகவும் கேப் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் சங்கங்கள் தெரிவித்தன.

தில்லி சா்வோதயா ஓட்டுநா் சங்கத்தைச் சோ்ந்த ரவி ரத்தோா் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு இரண்டு நாள் கெடு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லாவிட்டால், எங்கள் அடையாள வேலைநிறுத்தம் காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாறு27ம். நாங்கள் இதுபோன்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட விரும்பவில்லை.

ஆனால், எங்களுக்கு வேறு வழியும் இல்லை. ஒரு குறுகிய கால அறிவிப்பில் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டது. எனவே, என்சிஆா் நகரத்தைச் சோ்ந்த பல வாடைக் காா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இது தெரியாது. ஆகவே, தில்லி எல்லைகளில் வேலைநிறுத்தம் குறித்து அவா்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும்,, அவா்களின் சவாரி பயணங்களை முடித்த பிறகு இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.