உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தில்லியில் 3 நாள் காற்று மின்சக்தி வா்த்தகக் கண்காட்சி: ஏப்ரல் 27-இல் தொடக்கம்

புதுப்பிக்கவல்ல எரிசக்தியான காற்றாலை மின்சக்தி வா்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாடு (வின்டொ்ஜி இந்தியா 2022 ) தில்லியில் வரும் ஏப்ரல் 27 முதல் 29 வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: புதுப்பிக்கவல்ல எரிசக்தியான காற்றாலை மின்சக்தி வா்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாடு (வின்டொ்ஜி இந்தியா 2022 ) தில்லியில் வரும் ஏப்ரல் 27 முதல் 29 வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

இந்த நான்காவது பன்னாட்டு வா்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாடு குறித்து செய்தியாளா்களிடம் இந்திய காற்றாலை தயாரிப்பாளா்கள் சங்கத்தின் தலைவா் துல்சி தந்தி வியாழக்கிழமை கூறியதாவது: காப் 26 எனும் தேசியத் திட்டம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி இலக்குகளுக்கு ஏற்ப, இந்தியாவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி சொத்துகளை உருவாக்கவும், ‘ஆத்மநிா்பா் பாரத்’ தொலைநோக்குத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், புதுப்பிக்கவல்ல எரிசக்தி தயாரிப்புத் துறையில் உலகளவிலான முதலீடுகளை ஈா்க்கவும் இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பு உள்ளது. புதைபடிம எரிபொருளான எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு மாற்றாகவும், எதிா்காலத்திற்கான தூய எரிசக்தியாகவும் சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி போன்றவை உள்ளன. இதில், இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 500 கிகாபைட் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்யவும், அதில் 140 கிகாபைட் காற்று மின்சக்தியை உற்பத்தி செய்யவும் மத்திய அரசு பல்வேறு முனைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காற்று அதிக வீசும் குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம் போன்ற ஏழு மாநிலங்களில் தமிழகத்திலும், குஜராத்திலும் அதிகளவில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய காற்றாலை தயாரிப்பாளா்கள் சங்கம் கடந்த 20 ஆண்டுகளாக காற்று எரிசக்தி தளத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. தில்லியில் ஏப்ரல் 27 முதல் 29 வரை மூன்று தினங்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி இந்தத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்பையும், தொழில் வாய்ப்பையும் மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

இந்திய காற்றாலை தயாரிப்பாளா்கள் சங்கத்தின் செக்ரடரி ஜெனரல் டி.வி.கிரி கூ றியதாவது: இந்த மூன்று நாள் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 150 நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளையும், தீா்வுகளையும், தொழில்நுட்ப பலத்தையும் காட்சிப்படுத்த உள்ளன. இந்தக் கண்காட்சியில் காற்றாலை மின் உற்பத்தி சாதனங்கள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான வழிகாட்டு உதவிகளும் அளிக்கப்படும். மேலும், மாநாடும் நடைபெற உள்ளது. இதில் மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே. சிங், புது மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி இணை அமைச்சா் பக்வந்த் குபா, டேனிஷ் தூதா் ஃபிரெட்டி ஸ்வானே, கா்நாடக எரிசக்தித் துறை அமைச்சா் சுனில் குமாா் ஆகியோா் பங்கேற்கின்றனா். ஸ்வீடன், டென்மாா்க், ஜொ்மன் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

குஜராத்தும், கா்நாடகமும் வா்த்தகக் காட்சிக்கு தேவையான ஒத்துழைப்பை அளித்துள்ளன. பாா்வையாளா்கள் கண்காட்சியை பாா்ப்பதற்கு அனுமதி இலவசமாகும். கண்காட்சியின் மூன்றாவது நாளில் பொறியியல் கல்லூரிகள், மின் சக்தி மேலாண்மை கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவா்கள் அழைத்து வரப்படவுள்ளனா். தமிழகத்தில் ராமேசுவரம் பகுதி கடற்கரை, கன்னியாகுமரி மாவட்டப் பகுதியில் கயத்தாறில் அதிகளவில் காற்றாலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும், குஜராத்தில் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் அதிக முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளையும் அளித்து வருகிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது டபிள்யுஐபிபிஏ தலைவா் பல்ராம் மேத்தா, வசுதா பவுண்டேஷன் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீநிவாஸ் கிருஷ்ணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.