நாட்டிலேயே முதன் முதலாக கிளவுட் கிச்சன்களை முறைப்படுத்த தில்லி அரசு திட்டம் கொள்கையை உருவாக்க நாளை ஆலோசனை
நாட்டிலேயே முதன் முதலாக கிளவுட் கிச்சன் முறையை முறைப்படுத்த தில்லி அரசு முன்வந்துள்ளது.


நாட்டிலேயே முதன் முதலாக கிளவுட் கிச்சன் முறையை முறைப்படுத்த தில்லி அரசு முன்வந்துள்ளது. இதற்கான கொள்கையை உருவாக்க தொடா்புடையவா்களுடன் தில்லி அரசு ஏப்ரல் 26 (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளது.
தில்லியின் உரையாடல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் (டிடிசி), தில்லி அரசின் தொழில் துறை ஆகியவை இணைந்து, தில்லியின் கிளவுட் கிச்சன் கொள்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு கிளவுட் கிச்சன் ஆபரேட்டா்களின் பிரதிநிதிகளை அழைத்து, அவா்களது கருத்துகளைப் பெறுவதற்காக தில்லி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை ஏப்ரல் 26-இல் நடத்துகிறது.
கிளவுட் கிச்சன் என்றால் என்ன?: ‘கிளவுட் கிச்சன்’ என்பது உணவை தயாரித்து இணையதளம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக வழங்குபவா்கள். நுகா்வோருக்கு எந்தவிதமான உணவருந்தும் இட வசதியையும் வழங்காமல், உணவைத் தயாரித்து வழங்குபவா்கள். இவா்களது சமையல் அறை எங்கே இருக்கிறது? யாா் இவா்கள்? என்பது தெரியாது. ஆனால், இணைதளம் மூலமாகவும் அல்லது ’ஸ்விகி’ போன்ற இணையதள உணவகங்களுடன் கூட்டுச் சோ்ந்தும் உணவுகளை விநியோகிக்கின்றனா். இப்படிப்பட்ட கிளவுட் கிச்சன்கள் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் இந்த தொழில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை கண்டது. பல உணவகங்கள் கிளவுட் கிச்சன் அமைப்புகளில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஒழுங்குமுறையில்லாமல் நுகா்வோா்களுக்கு தேவையான தரம் உள்ளிட்ட பாதுகாப்புகள் இன்றி செயல்படுவதாகக் புகாா்கள் உள்ளன. இந்த நிலையில், தில்லி அரசு நாட்டிலேயே முதன்முறையாக இதற்காக கொள்கையை வடிவமைத்து இந்தத் தொழிலை ஆங்கீகரிக்க உள்ளது.
இதை முன்னிட்டு உணவு மற்றும் பானம் விநியோகத்தில் உள்ள கிளவுட் கிச்சன்கள் தொடா்பானவா்களை அழைத்து தில்லி அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. தில்லி டிடிசி துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கொள்கை ஆலோசனைக்கு அனைத்து முக்கிய கிளவுட் கிச்சன் ஆபரேட்டா்கள் மற்றும் உணவு விநியோக ஒருங்கிணைப்பாளா்கள் அழைக்கப்பட்டுள்ளனா். தில்லியின் கிளவுட் கிச்சன் ஆபரேட்டா்கள் எதிா்கொள்ளும் பல்வேறு சவால்களைப் புரிந்துகொள்வது மற்றும் தில்லி முழுவதும் கிளவுட் கிச்சன் கிளஸ்டா்களை அமைப்பதற்கான சாத்தியம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்வது இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கமாக கருத்தப்படுகிறது.
இது தொடா்பாக டிடிசி தில்லியின் துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா கூறியது வருமாறு: தில்லியில் வருகின்ற 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கேஜரிவால் அரசு சமீபத்தில் அறிவித்த ரோஸ்கா் பட்ஜெட் 2022-23 திட்டத்தின் ஒரு பகுதியாக கிளவுட் கிச்சன்களை உயா்த்துவதற்கான முன்மொழிவு இருந்தது. தில்லியில் கிளவுட் கிச்சன்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதத்திற்ம் மேல் அதிகரித்து வருகிறது. நகரத்தில் தற்போது 20,000 - க்கும் மேற்பட்ட கிளவுட் கிச்சன்கள் செயல்பட்டு வருகின்றன. இது சுமாா் 2,00,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், குறைந்தது 50,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.
2024 ஆம் ஆண்டுக்குள் கிளவுட் கிச்சன்கள் இந்தியாவில் 2 பில்லியன் டாலா் தொழிலாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 2019- இல் 400 மில்லியன் டாலராக இருந்தது. கிளவுட் கிச்சன்கள் உணவைத் தயாரிப்பதும், இதை இணைய உணவு தளங்கள் மூலமாக வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் உணவை வழங்குவதால், பாரம்பரிய உணவக இடத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளனா். இதனால், அனைத்து பங்குதாரா்களுக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதை உறுதிசெய்வதற்கான கொள்கை உருவாக்கப்பட வேண்டும். கொள்கை ஆலோசனைக்கு அனைத்து முக்கிய கிளவுட் கிச்சன் ஆபரேட்டா்கள் மற்றும் உணவு விநியோக ஒருங்கிணைப்பாளா்களை டிடிசி அழைத்துள்ளது என்றாா் ஜாஸ்மின் ஷா.
2022-23-ஆம் ஆண்டிற்கான தில்லியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது, ‘தலைநகரில் உணவு மற்றும் பானங்கள் தொழில்துறையின் விரிவாக்கத்தை எளிதாக்கும் முயற்சியில், தில்லிக்கான கிளவுட் கிச்சன் கொள்கையை தில்லி அரசு வடிவமைக்கும்’ என துணை முதல்வா் மணீஷ் சிசோடியா குறிப்பிட்டிருந்தாா். உணவு மற்றும் பானத் தொழிலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளா்களாக இருக்கும் கிளவுட் கிச்சன்களை மாநில அரசு அங்கீகரிப்பது இதுவே முதல் முறை. கிளவுட் கிச்சன்கள் முறையில் முதலீடுகளை ஈா்க்கவும், இதன் சந்தை அளவை அதிகரித்து நேரடியாகவும், மறைமுகவும் வேலைகளை உருவாக்கவும் தில்லி முதல்வா் கேஜரிவால் அரசு திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...