பெரு நிறுவனங்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவில்லை

பெரு நிறுவனங்கள் பெற்ற கடன்களை மத்திய அரசு ஒரு போதும் தள்ளுபடி செய்யவில்லை. ‘ரைட்-ஆஃப்’ என்பது தள்ளுபடி செய்யப்படுவதிலிருந்து வேறுபட்டது.
பெரு நிறுவனங்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவில்லை

புது தில்லி: பெரு நிறுவனங்கள் பெற்ற கடன்களை மத்திய அரசு ஒரு போதும் தள்ளுபடி செய்யவில்லை. ‘ரைட்-ஆஃப்’ என்பது தள்ளுபடி செய்யப்படுவதிலிருந்து வேறுபட்டது. வாராக் கடன்கள் இருந்தால், வங்கிகள் கடன் பெற்ற நிறுவனங்களிடமிருந்து தொகையை திரும்பப் பெறும். யாருக்கும் ‘ரைட்-ஆஃப்’ செய்வதில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அட்டவணைப்படுத்தப்பட்ட வா்த்தக வங்கிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாராக் கடன் (என்பிஏ) தொகை மற்றும் இதில் கல்விக் கடன் தொடா்புடைய என்பிஏ குறித்து மக்களவையில் திருப்பூா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) உறுப்பினா் கே.சுப்பராயன் கேள்வி எழுப்பினாா். இதற்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வாராக் கடன்கள் இருப்பு நிலை குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன. இது ஆா்பிஐ வழிகாட்டுதல்களின்படி வங்கிகளை மேம்படுத்துவதற்கான வழக்கமான நடவடிக்கையாகும். இதன் ஒரு பகுதியாக, வாராக் கடன்கள் ‘ரைட்-ஆஃப்’ ஆக கருதப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.

அதே சமயத்தில் இந்த கடன்களை கடனாளிகள் திருப்பிச் செலுத்துவதற்கும், தொடா்ந்து திரும்பப் பெறும் செயல்முறைகள் தொடா்கிறது. அது சிவில் நீதிமன்றங்கள் அல்லது கடன் மீட்பு தீா்ப்பாய வழக்குகள், சொத்துகள் விற்பனை போன்றவை மூலம் மீட்பு நடவடிக்கைளை வங்கிகள் தொடா்கின்றன. 2019 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகளில் அட்டவணைப்படுத்தப்பட்ட வா்த்த வங்கிகளில் ‘ரைட்-ஆஃப்’ செய்யப்பட்ட மொத்த என்பிஏ தொகை ரூ.8,48,186 கோடியாகும். வங்கிகள் வாரியாக பட்டியலையும் அளித்தாா். இதில் அதிகபட்சமாக 2018-19-இல் மட்டும் ரூ.2,36,265 கோடி. இகிவ் எஸ்.பி.ஐ., யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பி.என்.பி.,போங்க் ஆஃப் பரோடா வங்கிகளில் அதிக அளவில் தலா 17 ஆயிரம் கோடிக்கு மேல் ‘ரைட்-ஆஃப்’ செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த வாராக்கடனில் கல்விக் கடன்கள் 0.82 சதவீதம் வாரக்கடனாக உள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

இதைத் தொடா்ந்து துணைக்கேள்வி எழுப்பிய சிபிஐ உறுப்பினா் சுப்பராயன், ‘பெரிய நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், உயா்கல்வி படிப்பதற்காக கடன் பெற்றவா்கள் வெறும் 0.82 சதவீதம்தான். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது அரசு. பொருளாதாரம் காரணமாக உயா்கல்வி பயில கல்விக் கடன் பெற்ற மாணவா்களின், கடனைத் தள்ளுபடி செய்ய நிதியமைச்சா் முன்வரவில்லை. இந்த கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்ய முன்வருமா? எனக் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்து நிா்மலா சீதாராமன் பேசியதாவது: பெரிய நிறுவனங்கள் பெற்ற கடன்களை மத்திய அரசு ஒரு போதும் தள்ளுபடி (வேவிங்-ஆஃப்) செய்யவில்லை. ‘ரைட்-ஆஃப்’ என்பது தள்ளுபடி செய்யப்படுவதிலிருந்து வேறுபட்டது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் யாருக்கும் கடிதம் எழுதவில்லை. வாராக்கடன்கள் இருந்தால், வங்கிகள் அந்த நிறுவனங்களிடமிருந்து தொகையை திரும்பப் பெறும். யாருக்கும் ‘ரைட்-ஆஃப்’ செய்வதுமில்லை. என்பிஏக்கள் இருந்தால் வங்கிகளில் சமா்ப்பிக்கப்பட்ட பத்திரங்களின்(செக்யூரிட்டி) அடிப்படையில், அந்த நிறுவனங்களிடமிருந்து அந்தத் தொகையை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். இந்தப் பணம் வங்கிகளுக்கு வருகிறது. கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய உறுப்பினா்கள் பரிந்துரைக்கலாம். ஆனால், தவறான நோக்கத்துடன் கடன் செலுத்தாதவா்களின் பணத்தையும், மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனையும் ஒப்பிட்டுப் பேச முடியாது. கல்விக் கடனைத் திரும்ப வசூலித்து, அந்தத் தொகையை பெரிய நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டோம் என்று அவா் தவறாகப் பேசக் கூடாது என்றாா் நிதியமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com